கே.டி.எம். 390 அட்வென்ச்சர் எண்டியூரோ மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
கே.டி.எம். நிறுவனம் புதிய அட்வென்ச்சர் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கே.டி.எம். நிறுவனத்தின் பிரபல 390 அட்வென்ச்சர் மாடலின் புது வெர்ஷன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
புகைப்படத்தின் படி புதிய 390 அட்வென்ச்சர் அடுத்த தலைமுறை மாடலாக இருக்கும் என்றும் இது 390 அட்வென்ச்சர் எண்டியூரோ பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் புதிய 390 அட்வென்ச்சர் மாடலின் முன்புறம் 21 இன்ச் ஸ்போக் வீல்கள் உள்ளன. இதன் மூலம் புதிய மோட்டார்சைக்கிள் அதிகளவு அட்வென்ச்சர் சார்ந்த மாடலாக இருக்கும்.

ஸ்போக் வீல் தவிர, இதன் ஃபிரேம் வித்தியாசமாக உள்ளது. இதில் உள்ள சப்-ஃபிரேம் தற்போதைய 390 அட்வென்ச்சர் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மெயின் ஃபிரேம் CNC பாகங்களை பயன்படுத்துகிறது. இது சோதனை மாடலில் மட்டும் வழங்கப்பட்டு இருக்கலாம். இதன் ப்ரோடக்ஷன் மாடலில் வேறு பாகங்கள் பயன்படுத்தப்படலாம்.
புதிய கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் 390 அட்வென்ச்சர் மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்படலாம் அல்லது எண்டியூரோ பெயரில் புது வேரியண்ட் ஆகவும் அறிமுகம் செய்யப்படலாம். புதிய கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
