ஜாகுவார் லேண்ட் ரோவர் மற்றும் Nvidia இணைந்து தானியங்கி கார் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட இருக்கின்றன.

ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த மென்பொருள் நிறுவனமான Nvidia உடன் இணைந்து தலைசிறந்த கனெக்டிவிட்டி மற்றும் மேம்பட்ட தானியங்கி வசதிகளை கார்களில் வழங்க முடிவு செய்துள்ளது. 2025 முதல் வெளியாக இருக்கும் மாடல்களில் இந்த வசதிகள் வழங்கப்பட இருக்கின்றன. 

பல ஆண்டுகள் ஒப்பந்தத்தின் படி இரு நிறுவனங்கள் இணைந்து மென்பொருள் உருவாக்கும் பணிகளில் ஈடுபட இருக்கின்றன. Nvidia தனது தொழில்நுட்பத்தை அப்படியே கொடுப்பதை விட இந்த கூட்டணியில் இருநிறுவனங்கள் இணைந்தே புது மென்பொருளை உருவாக்க இருக்கின்றன. Nvidia-வின் டிரைவ் மென்பொருள் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் கார்களில் வழங்கப்பட இருக்கிறது.

அதன்படி இருநிறுவன கார் மாடல்களிலும் அடுத்த தலைமுறை ஆட்டோமேடெட் டிரைவிங் சிஸ்டம்கள், ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சேவைகள் மற்றும் அனுபவங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றன. தானியங்கி முறைகள் மட்டுமின்றி வாகன பாதுகாப்பு பிரிவிலும் இருநிறுவனங்கள் இணைந்து செயல்பட இருக்கின்றன. அதன்படி ஆக்டிவ் சேஃப்டி, பார்கிங் சிஸ்டம்கள், ஆகுபண்ட் மாணிட்டரிங் என பல்வேறு அம்சங்கள் உருவாக்கப்படுகின்றன.

புதிய மென்பொருள் வழங்கப்பட்டாலும், கார்களில் தொடர்ந்து ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் சொந்த இயங்குதளமே வழங்கப்பட இருக்கின்றன. எனினும், இந்த ஓ.எஸ். 2025-க்கு ஏற்றவாரு அப்டேட் செய்யப்பட்டு இருக்கும். இத்துடன் Nvidia டிரைவ் ஹைபெரியன் கம்ப்யூடிங் மற்றும் சென்சிங் ஸ்டாக் வழங்கபடுகிறது.

இரு நிறுவனங்கள் இடையிலான கூட்டணி எத்தனை ஆண்டுகள் நீடிக்கும் என்றோ, இதற்கான வர்த்தக முதலீடு பற்றியோ எந்த தகவலும் வெளியாகவில்லை.