இந்தியாவில் எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு துறையில் தொழில் நடத்த முடியாத சூழல் நிலவுவதாக வோடபோன் நிறுவனம் தலைவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.  

தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தொடர்ந்து பல பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றன. இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் இந்தியாவில் சேவை செய்து வருகிறது. கடன் சுமை காரணமாக அந்நிறுவனம் ஐடியா நிறுவனத்துடன் சேர்ந்து சேவையைத் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், பிரபல வோடபோன் நிறுவனத்தின் சிஇஓ நிக் ரீடு நேற்று டெல்லியில் பேட்டியளிக்கையில் "இந்தியாவில் தொழில் முதலீடு மற்றும் வாய்ப்பு மிகவும் மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனினும், நம்பிக்கையுடன் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று உறுதியாக இருக்கிறோம். அதற்கான சந்தையும் இருப்பதை கணித்துள்ளோம். சந்தையில் கடுமையான தொழில் போட்டியை சமாளிக்க வேண்டியது இருக்கும் என்பதும் எங்களுக்கு தெரியும். அதற்கு நாங்கள் சமாளிக்க தயாராக இருக்கிறோம்.

கடும் போட்டி நிலவுவதால் இந்தியாவில் இருந்து வோடபோன் வெளியேற உள்ளது என்ற வதந்தி சமீப காலமாக பரப்பப்பட்டு வருகிறது. இதில் உண்மை இல்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளார். வோடபோன் நிறுவனம் தனது சேவையை தொடர்ந்து அளிக்கும் அதில் எந்த சந்தேகமும் இல்லை. தொழில் போட்டியை சமாளிக்க தகுந்த உத்திகளை கையாள்வது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அளிக்கும் சலுகைகள் மற்றும் கூடுதல் வசதிகள் மற்ற நிறுவனங்களின் வர்த்தகத்தை  கடுமையாக பாதிக்கிறது. இதனால் அவை தொழில் போட்டியை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன என வோடபோன் தலைவர் நிக் ரீடு கூறியுள்ளார்.