வாடிக்கையாளர்கள் எளிதாக பிரீமியம் செலுத்தும் வகையில் எல்ஐசி புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. செல்போனில் வாட்ஸ்அப் வசதி இருந்தால் போதும், 89768 62090 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் பிரீமியம் செலுத்தலாம்.
மக்களின் நம்பிக்கையை பெற்ற எல்ஐசி
நேரம், நிதி ஆகியவற்றிக்கு ஏற்ப மாதா மாதமோ, ஆண்டுக்கு ஒரு முறையோ பிரீமியம் செலுத்தி வரும் தனது வாடிக்கையாளர்கள் இனி எளிதாக அதனை செலுத்தும் வசதியை எல்ஐசி ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவின் இதயம் போல இருக்கும் எல்ஐசி, பாதுகாப்பும், நம்பிக்கையும் கலந்து நம் எதிர்காலத்தைக் காக்கும் ஒரு வளமான பாசக் கொடியே போல விளங்குகிறது. அரசு நிதியுதவியுடன் இயங்கும் இந்த நிறுவனம் அடித்தட்டு மக்களின் நம்பிக்கைக்குரிய தோழன் என்றால் அது மிகையல்ல.
முதலீட்டு திட்டங்களும் பாதுகாப்பு வசதியும்
குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு, ஓய்வுகால திட்டங்கள், முதலீட்டு திட்டங்கள் என பொதுமக்களின் கனவுகளுக்கேற்ப ஏராளமான திட்டங்கள் அதில் குவிந்து கிடப்பதால், அடித்தட்டு மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும் எல்ஐசியை பெரிதும் விரும்புகின்றனர்.
புதிய வசதி அறிமுகம் - நன்றி சொல்லும் வாடிக்கையாளர்கள்
80C மற்றும் 10(10D) பிரிவுகளின் கீழ் வரி சலுகை, போனஸ் என வாடிக்கையாளர்களுக்கு எல்ஐசி அள்ளிக்கொடுப்பதால் ஆண்டு தோறும் அதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல்வேறு திட்டங்களில் பணம் செலுத்தி வருவோர் திடீர் தேவைக்கு கடன் வாங்கிக் கொள்ள முடியும் என்பதால் சில ஓய்வூதிய திட்டங்கள் வங்கி டெபாசிட்டுக்கு மாற்றாகவும் பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் எளிதாக பிரீமியம் செலுத்தும் வகையில் தற்போது புது சேவையை எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ளது.
செல்போன் இருந்தாலே போதும்
கையில் செல்போனும், அதில் வாட்ஸ்அப் வசதியும் இருந்தால் போதும் மிகவும் எளிதாக பிரீமியம் செலுத்தி விடலாம்.எல்.ஐ.சி நிறுவனம், தன் வாடிக்கையாளர் கள் வாட்ஸ்அப் பாட் மூலம் பிரீமியம் செலுத்தும் புதிய வசதியை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த வசதியைப் பயன்படுத்தி 89768 62090 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் பாலிசிக்கான பிரீமியம் தொகையை எளிதாக செலுத்தலாம்.
பாட் என்பது தானியங்கி முறையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி செயல்படும் செயலி ஆகும். எல்.ஐ.சி இணைய தளத்தில் பதிவு செய்துள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த வசதியைப் பயன் படுத்திக்கொள்ளலாம். இதைப் பயன்படுத்தி செலுத்த வேண்டிய பிரீமியம் பற்றிய விவரங்களை அறிந்து, உலகில் உள்ள எந்த மூலையில் இருந்தும் சுலபமாக பிரீமியம் தொகையைச் செலுத்திக் கொள்ளலாம். அதேபோல்லபிரீமியம் தொகையை யு.பி.ஐ பரிவர்த்தனைகள் மூலமாகவோ, நெட் பேங்கிங் முறையிலோ செலுத்திக் கொள்ளலாம்.
பொதுத்துறையை சேர்ந்த நிறுவனமானது, பல தனியார் நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் பல அதிரடியான திட்டங்களை கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.எல்ஐசி ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகள் மற்றும் ஓய்வூதியத் திட்டங்களை விற்பனை செய்கிறது. முதலீட்டுடன் இணைக்கப்பட்ட காப்பீடு, மருத்துவ காப்பீடு தற்போது தற்போது வரை எல் ஐ சியிடம் இல்லாத நிலையில் அதனை துவங்கினால் கோடிக்கணக்கானோர் பயன்பெறுவர் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
