ஹோண்டா நிறுவனம் உருவாக்கி வரும் புதிய இருசக்கர வாகனம் பற்றிய புது தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையின் கம்யூட்டர் மோட்டார்சைக்கிள் பிரிவில் அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது. ஏற்கனவே இந்திய ஸ்கூட்டர் சந்தையில் ஹோண்டா கணிச விற்பனை மூலம் முன்னணி இடத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு வருகிறது.
குறைந்த விலை மோட்டார்சைக்கிள் பிரிவை குறிவைத்து புதிய மோட்டார்சைக்கிளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அடுஷி ஒகாடா தெரிவித்து இருக்கிறார். இந்திய சந்தையில் ஹோண்டா CD110 டிரீம் மாடல் அந்நிறுவனத்தின் குறைந்த விலை மாடலாக இருக்கிறது. இதன் விலை ரூ. 66,033, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

சந்தையில் நிலவும் போட்டியை கருத்தில் கொண்டு கம்யூட்டர் பிரிவில் CD110 டிரீம் மற்ற நிறுவன மாடல்களுக்கு போதுமான போட்டியை ஏற்படுத்தவில்லை என அவர் மேலும் தெரிவித்தார். இந்த பிரிவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையிலான மாடலை ஹோண்டா அறிமுகம் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார். விலை குறைவு என்ற போதும் ஹோண்டா CD110 அம்சங்கள் அடிப்படையில் ஹீரோ ஸ்பிலெண்டர் மாடலை விட சற்றே பின்தங்கி இருக்கிறது.
அந்த வகையில் ஹீரோ மோட்டோகார்ப் வழியில் ஹோண்டா நிறுவனமும் தனது புதிய மோட்டார்சைக்கிளில் மைலேஜை அதிகப்படுத்தும் தொழில்நுட்பங்களை வழங்கும் என தெரிகிறது. தொழில்நுட்பங்கள் அடிப்படையில் ஹோண்டாவின் கை எப்போதும் ஓங்கியே இருக்கிறது. இதனால் புதிய மாடலில் ஹோண்டா ஐடில் ஸ்டாப் சிஸ்டம் வழங்கும் என தெரிகிறது.

யுனிகான் மற்றும் ஷைன் போன்ற மாடல்களை போன்று ஹோண்டா லிவோ மற்றும் டிரீம் சீரிஸ் விற்பனையில் அமோக வரவேற்பை பெற்றதில்லை. இந்திய சந்தையில் 125சிசி பிரிவில் ஷைன் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இதனால் ஷைன் மாடலை ரிகால் செய்து ஹோண்டா ஷைன் 110 மாடலை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.
