Asianet News TamilAsianet News Tamil

சாதனை படைத்த ஜிஎஸ்டி வருவாய்: 13 சதவீதம் அதிகரிப்பு!

ஜிஎஸ்டி வருவாய் வசூல் கடந்த ஆண்டை விட 13 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது

GST revenue collection increase of 13 percent second highest ever smp
Author
First Published Nov 2, 2023, 3:28 PM IST | Last Updated Nov 2, 2023, 3:28 PM IST

நடப்பாண்டு அக்டோபர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் வசூல் ரூ.1.72 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்துக்கு அடுத்தபடியாக இது இரண்டாவது அதிகபட்சம் எனவும், இது சென்ற ஆண்டைவிட 13 சதவீதம் அதிகமாகும் எனவும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “2023 அக்டோபர் மாதத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,72,003 கோடியாகும். இதில் ரூ.30,062 கோடி மத்திய ஜிஎஸ்டி, ரூ.38,171 கோடி மாநில ஜிஎஸ்டி. ரூ. 91,315 கோடி (பொருட்களின் இறக்குமதியில் வசூலிக்கப்பட்ட ரூ.42,127 கோடி உட்பட) ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி. ரூ.12,456 கோடி (இறக்குமதி மீது வசூலிக்கப்பட்ட ரூ.1,456 கோடி உட்பட) செஸ் ஆகும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 1200 சம்பளம் முதல் ரூ.10,000 கோடி நிறுவனம் வரை.. யார் இந்த கஜல் அலக்?

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியிலிருந்து மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.42,873 கோடியையும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.36,614 கோடியையும் மத்திய அரசு  செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான தீர்வுக்குப் பிறகு 2023 அக்டோபர் மாதத்தில் மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய், மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ .72,934 கோடியாகவும், மாநில ஜி.எஸ்.டிக்கு ரூ.74,785 கோடியாகவும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 அக்டோபர் மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் இருந்ததை விட 13 சதவீதம் அதிகமாகும். இம்மாதத்தில், உள்நாட்டுப் பரிவர்த்தனைகள் (சேவைகள் இறக்குமதி உட்பட) மூலம் கிடைக்கும் வருவாய், கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்த மூலங்களிலிருந்து கிடைத்த வருவாயை விட 13 சதவீதம் அதிகமாகும். 2023-24 நிதியாண்டில் சராசரி மொத்த மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் இப்போது ரூ.1.66 லட்சம் கோடியாக உள்ளது, இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இருந்ததை விட 11 சதவீதம் அதிகமாகும்.

2023 அக்டோபர் மாதம் வரை ஒவ்வொரு மாநிலத்தின் தீர்வுக்குப் பிந்தைய ஜிஎஸ்டி வருவாயின் மாநில வாரியான புள்ளிவிவரங்கள் படி, தமிழ்நாட்டில் 2023-24-ல்  தீர்வுக்கு முந்தைய மாநில ஜிஎஸ்டி வருவாய் ரூ.23,661 கோடியாகவும், தீர்வுக்குப் பிந்தைய மாநில ஜிஎஸ்டி மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 37,476 கோடியாகவும் உள்ளது.

புதுச்சேரியில் 2023-24-ல் தீர்வுக்கு முந்தைய மாநில ஜிஎஸ்டி வருவாய் ரூ. 288 கோடியாகவும் தீர்வுக்குப் பிந்தைய மாநில ஜிஎஸ்டி மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி பங்கின் தொகு மொத்தம் ரூ. 833 கோடியாகவும் உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios