இனி பழைய காரை ஈசியா விற்க முடியாது... வரியை வைத்துத் தீட்டிய ஜிஎஸ்டி கவுன்சில்!
55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பழைய கார்களை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களுக்கான வரி 12% லிருந்து 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பழைய கார்களை விற்பனை செய்வதற்கான வரி உயர்வு, பாப் கார்னுக்கு சுவைக்கு ஏற்ப விலை என பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. செறிவூட்டப்பட்ட அரிசி, ஏஏசி பிளாக்குகள் ஆகியவற்றுக்கான வரி விகிதமும் மாற்றப்பட்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 55வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கும் முக்கிய முடிவுகள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆட்டோக்ளேவ்ட் ஏரேட்டட் காங்கீட் (ஏஏசி) பிளாக்குகள் 50 சதவீதத்துக்கு மேல் சாம்பல் கொண்டதாக இருந்தால் அது ஹெச்எஸ் 6815 குறியீட்டின் கீழ் வந்துவிடும். அதற்கு ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
பழைய, பயன்படுத்திய கார்களை வணிக நிறுனவங்கள் விற்பனை செய்வதற்கான வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் கூடியிருக்கிறது. இது தனிநபர்கள் பழைய / பயன்படுத்திய கார்களை விற்பனை செய்வதற்குப் பொருந்தாது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்கள் உள்பட அனைத்து பழைய / பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு 12% வரி விதிக்கப்பபட்டுள்ளது. இது தற்போது 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது வாகனத்தை விற்பனை செய்பவரின் மார்ஜின் தொகைக்கு மட்டுமானது. அதாவது வாங்கிய விலைக்கும் விற்கும் விலைக்கும் உள்ள வித்தியாசத்திக்கு மட்டும் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும்.
இதனிடையே, தற்போதுள்ள ஜிஎஸ்டி கட்டமைப்பை எளிமையாக்கும் வகையில் செறிவூட்டப்பட்ட அரிசியின் வரியை 5 சதவீதம் குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. அதேபோல், சாப்பிடுவதற்கு தயாராக வழங்கப்படும் பாப்கார்ன்களின் வரி விகிதங்களை ஜிஎஸ்டி கவுன்சில் தெளிவுபடுத்தியுள்ளது. முன்கூட்டியே பேக் செய்யப்பட்டோ அல்லது லேபில் இடப்படாமலோ, நன்கீன்ஸ் போல உப்பு மற்றும் மசாலா கலந்து வழங்கப்படும் பாப்கார்ன்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். முன்பே பேக் செய்யப்பட்டு லேபிலிடப்பட்டிருந்தால் அவற்றுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.
பாப்கார்னுக்கு அதன் சுவைக்கு ஏற்ப வரி விதிக்கப்படும். சாதாரண பாப் கார்னுக்கு 12% வரி உள்ள நிலையில், காராமெல் பாப்கார்ன் எனப்படும் சர்க்கரை மூலம் சுவை மாற்றப்பட்ட பாப்கார்ன்களுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது.
கடிகாரம், பேனா, ஷூ, ஆடைகள் போன்ற பொருள்களின் வரியை உயர்த்துவது குறித்தும் இந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. காப்பீடு தொடர்பான விவகாரத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்பதால் அது குறித்த விவாதம் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தீங்கு விளைவிக்கும் பொருள்கள் (Sin goods) மீதான வரியை நான்கு அடுக்கு (5%, 12%, 18%, 28%) வரி விகிதங்களுக்கு மேல் உயர்த்தி, 35% வரி விதிப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யுடிஎஸ் ஆப் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 3% கேஷ்பேக் கிடைக்கும்!