ரஷ்யாவுடன் ரூபாயில் வர்த்தகம் செய்யவது குறித்து அடுத்தவாரம் மத்திய அரசு முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவுடன் ரூபாயில் வர்த்தகம் செய்யவது குறித்து அடுத்தவாரம் மத்திய அரசு முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு ஆலோசனை
ரஷ்யாவின் ரூபிள், இந்தியாவின் ருபாய் மூலம் வர்த்தகம் நடந்தால் எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்து மத்திய அரசு அடுத்த வாரம் ஆலோசிக்க இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு 50 கோடி டாலர் ரஷ்யாவிலிருந்து வரவேண்டியுள்ளது.
ரஷ்யா மீது பொருளதாரத்தடை விதிக்கப்பட்டதால், டாலர் மூலம் வர்த்தகம் செய்ய இயலாது. ஆதலால் இந்திய ஏற்றுமதியாளர்கள் எவ்வாறு இந்தத் தொகையை பெறலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்படும்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள், எஸ்பிஐ வங்கி அதிகாரிகள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.

ரூபிள்-ரூபாய் வர்த்தகம்
சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, ரஷ்யாவுடன் 1080 கோடி டாலருக்கு இந்தியா வர்த்தகம் செய்துள்ளது. ஆனால், உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்புக்குப்பின், விதி்க்கப்பட்ட பொருளாதாரத் தடைகள், நிதித்தடைகள் ஆகியவற்றால் இனிவரும் காலங்களில் இந்த வர்த்தக அளவு குறையலாம் எனத் தெரிகிறது
ரஷ்யாவுடன் ரூபிள்-இந்திய ரூபாய் மூலம் செய்யப்படும் வர்த்தகத்தில், ஏற்றுமதியாளர்கள் ரூபிளில் அன்னியச் செலவாணி கிடைத்தால், அதை வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும், பின்னர் அது ரூபாய்க்கு மாற்றிக்கொள்ளப்படும்.அதன்பின் அந்த ரூபாயை டாலராக மாற்ற வேண்டும்.

இறக்குமதி
ஆனால், வர்த்தகத்தைப் பொறுத்தவரை ரஷ்யாவிலிருந்து அதிகமாக இந்தியா இறக்குமதி செய்கிறது. ஏற்றுமதியைப் பொறுத்தவரை மருந்துப் பொருட்கள், தேயிலை, வேளாண் பொருட்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக ராணுவத் தளவாடங்கள், ஆயுதங்கள் அதிகமாக ரஷ்யாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது.
ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையால் அந்நாட்டிலிருந்து ஏராளமான மேற்கத்திய நாட்டு நிறுவனங்கள் வெளியேறிவிட்டன, பல நிறுவனங்கள் வர்த்தக்கத்தை நிறுத்திவிட்டன. இதையடுத்து, மேற்கத்திய நாடுகள் சாராத நிறுவனங்கள், நாடுகளுடன் வர்த்தகத்தை ஏற்படுத்த ரஷ்யா முயன்று வருகிறது.

வர்த்தகப் பற்றாக்குறை
ரஷ்யாவுடன் 500 கோடி டாலர் வர்த்தகப் பற்றாக்குறை இந்தியாவுக்கு இருக்கிறது. ஆதலால், ரஷ்யாவுக்கு எந்தெந்தப் பொருட்களை ஏற்றுமதி செய்தால், வர்த்தகப்பற்றாக்குறையைக் குறைக்கலாம் என்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. மேலும், ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு இந்திய ரூபாய் மூலமே பணம் செலுத்தவும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
