வெங்காயம் விலை அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் வகையில், இந்தியாவில் இருந்து அனைத்து வகையான வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.

மகாராஷ்ரா, கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அம்மாநிலங்களில் பெய்த கனமழையால் வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், வெங்காயம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. தொடர்ந்து, பண்டிகைகள் வருவதால், வெங்காயத்தை பதுக்கி, அவற்றை கூடுதல் விலைக்கு விற்கும் நடவடிக்கைகளை, மொத்த வியாபாரிகளும், 'ஆன்லைன்' வர்த்தகர்களும் துவக்கியுள்ளனர். இதனை தடுக்கம் நோக்கில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இந்நிலையில், உள்நாட்டில், வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் வகையில், வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து வகையான வெங்காயங்களின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு அமலில் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.