சென்னையில் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது, ஒரு சவரன் ₹88,480-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தை நிலவரங்கள், ரூபாய் மதிப்பு சரிவு,  பண்டிகை கால தேவை அதிகரிப்பு ஆகியவை இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது.

மீண்டும் ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும் தங்கம் விலை

வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள் கிழமை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் திருமண ஏற்பாடு செய்து வரும் நடுத்த வர்க்கத்தினர் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

சென்னையில் ஆபரணத்தங்கம் விலைக கிராமுக்கு 110 ரூபாய் அதிகரித்து 11060 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து 88,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து 166 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பார்வெள்ளி ஒரு லட்சத்து 66 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்காவில் வட்டி விகிதம் குறையும் என்ற எதிர்பார்ப்பு, முதலீட்டாளர்களை தங்கத்தில் பாதுகாப்பான முதலீடாக கருதச் செய்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் ஒரு அவுன்சுக்கு தங்க விலை அதிகரித்துள்ளது. அந்த தாக்கம் இந்திய சந்தையிலும் நேரடியாகப் பிரதிபலிக்கிறது. அதே நேரத்தில், ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக குறைந்துள்ளது. இந்தியா தங்கத்தை பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால், ரூபாய் மதிப்பு குறையும்போது தங்கத்தின் இறக்குமதி விலை தானாகவே உயர்கிறது. இதுவும் உள்நாட்டு விலையைக் கடுமையாக உயர்த்துகிறது.

மேலும், மத்திய கிழக்கு பகுதிகளில் நிலவும் அரசியல் பதட்டங்கள் மற்றும் எண்ணெய் விலை ஏற்றம் காரணமாக உலகளவில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்தாக தங்கத்தைத் தேர்வு செய்து வருகின்றனர். இதுவும் விலை உயர்வுக்கு துணைபுரிகிறது. இதனுடன், நவராத்திரி, தீபாவளி மற்றும் திருமண காலம் ஆகியவை தொடங்கவுள்ள நிலையில் தங்கத்திற்கான தேவை திடீரென அதிகரித்துள்ளது. தேவை அதிகரித்து, வழங்கல் குறைந்ததால் விலை மேலும் ஏறியுள்ளது. கூடுதலாக, சர்வதேச போக்குவரத்து செலவுகள் மற்றும் உற்பத்தி கட்டணங்கள் உயர்ந்திருப்பதும் விலை உயர்விற்கு ஒரு காரணமாக உள்ளது.

மொத்தத்தில் பார்க்கும்போது, சர்வதேச சந்தை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பண்டிகை மற்றும் திருமண தேவைகள், முதலீட்டு பாதுகாப்பு மனப்பாங்கு ஆகியவை ஒன்றிணைந்து தங்கத்தின் விலையை சென்னையில் புதிய உச்சத்தை அடையச் செய்துள்ளன.