ஒரு சவரன் தங்கம் விலை ரூ.2 லட்சத்தை எட்டும் என்று சர்வதேச முதலீட்டு நிறுவனம் கணித்துள்ளது. 2030ஆம் ஆண்டுவாக்கில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 8,900 டாலராக உயரும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சவரன் தங்கம் விலை 75 ஆயிரம் ரூபாயை நெருங்கி வருகிறது. இந்த விலையே நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இடைக்காலத்தில் ஒரு அவுன்ஸ் ( 31.1 கிராம்) தங்கத்தின் விலை சுமார் 4,000 முதல் 5,000 டாலராகவும் 2030ஆம் ஆண்டுவாக்கில் இது 8,900 டாலராகவும் உயரும் என சர்வதேச முதலீட்டு நிறுவனத்தின் அறிக்கை ஒன்று கணித்திருக்கிறது. ஒரு அமெரிக்க டாலர் 83 ரூபாய் என்று வைத்துக்கொண்டால்கூட, 2030ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 23,751 ரூபாயை எட்டும். அதாவது ஒரு பவுன் தங்கத்தின் விலை 1.80 லட்சம் வரை உயரலாம் என்று அந்த அறிக்கை கணிக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதிர்ச்சி அறிக்கை

முதலீட்டு நிறுவனமான இன்க்ரிமென்டம், சமீபத்தில் "Gold We Trust Report 2025" என்ற அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையில், கடந்த சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை உயர்வுக்கான காரணங்களையும் எதிர்காலத்தில் தங்கத்தின் விலை வெகுவாக உயரும் என்ற கணிப்பிற்கான காரணங்களையும் பட்டியலிட்டிருக்கிறது. முக்கியமாக, கடந்த மூன்று ஆண்டுகளில் பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் கையிருப்பில் உள்ள தங்கத்தின் அளவை ஆண்டுக்கு ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு அதிகரித்திருக்கின்றன.

ஒரு கிராம் ரூ. 11 ஆயிரத்தை தொடும்

சர்வதேச நாடுகள் தங்களின் நிதிக் கையிருப்பில் தங்கத்தின் சதவிகிதத்தை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. உதாரணமாக ரஷ்யாவின் நிதிக் கையிருப்பில் தங்கத்தின் சதவிகிதம் கடந்த பத்தாண்டுகளில் 8லிருந்து 34 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சீனா ஒவ்வொரு மாதமும் 40 டன் தங்கத்தை வாங்கும் என கோல்ட் மேன் சாக்ஸ் நிறுவனம் கணித்துள்ளதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அதன் அடிப்படையில் 2030 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை ஒரு அவுன்சுக்கு 8,900 டாலர் என்ற விலையைத் தொடும். இது ஆண்டுக்கு 19 சதவிகித வளர்ச்சியைக் குறிக்கிறது. நடப்பாண்டின் இறுதியிலேயே ஒரு அவுன்சின் விலை 4,080 டாலர்களைத் தொடும் என அறிக்கையில் தெரிவிக்கவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 10,895 ரூபாயாக இருக்கும்.

75 சதவீதம் விலை உயர்வு

நிரந்தர வைப்புத் தொகை, பரஸ்பர நிதிகள், பங்குச் சந்தை, கடன் பத்திரங்கள் என முதலீட்டாளர்கள் முன்பாகப் பல வாய்ப்புகள் இருக்கின்றன. இதில் மிகச் சிறந்த முதலீடுகள் என எடுத்துக் கொண்டாலும் 10-12 சதவிகித வருவாயே கிடைக்கும் என்ற நிலையில், தங்கம் 19 சதவிகித வளர்ச்சியைக் கொடுக்கும் என்கிறது இந்தக் கணிப்பு.தங்கத்தின் விலை குறைய வேண்டுமானால் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தாங்கள் வாங்கும் தங்கத்தின் அளவைக் குறைக்க வேண்டும் என்கின்றனர் சந்தை நிபுணர்கள். தங்கத்தைப் பொறுத்தவரை, அதன் விலை கடந்த ஓர் ஆண்டில் 75 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாக கூறியுள்ள சந்தை நிபுணர்கள் வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் என தெரிவிததுள்ளனர்.