fuel price today:இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சிறிது காலத்துக்கு தொடர்ந்து உயரக்கூடும், உற்பத்தி வரி குறைப்புக்கு வாய்ப்பு இருக்காது என்று எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சிறிது காலத்துக்கு தொடர்ந்து உயரக்கூடும், உற்பத்தி வரி குறைப்புக்கு வாய்ப்பு இருக்காது என்று எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

4 மாதங்கள்

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கடந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதியுடன் பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படுவது நிறுத்தப்பட்டது. ஏறக்குறைய 4 மாதங்களாக பெட்ரோல், டீசல்விலையில் எந்த மாற்றமும் எண்ணெய் நிறுவனங்கள் செய்யவில்லை

கச்சா எண்ணெய் விலை

ஆனால், உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் காரணமாககச்சா எண்ணெய் விலை பேரல் 140 டாலராக அதிகரித்தது. இதனால் கடந்த நவம்பர் மாதம் கச்சா எண்ணெய் விலை 81 டாலராக இருந்த நிலையில் தற்போது பேரல் 139 டாலருக்கு அதிகரித்துவிட்டது. ஏறக்குறைய 25 சதவீதம் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துவிட்டதால், எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

இதற்கிடையே கச்சா எண்ணெய் விலை கடந்த வாரம் சரிந்து பேரல் 100 டாலர் வரை வந்தநிலையில் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இதனால் வேறு வழியின்றி எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 4 மாதங்களுக்குப்பின் நேற்று பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 80 காசுகளும், சமையல் சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்தி அறிவித்தனர். தொடர்ந்து 2-வது நாளாகஇன்றும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 80 காசு உயர்ந்துள்ளது. 

இதனால், சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் 80பைசா அதிகரித்து, ரூ.102.91 ஆகவும், டீசல் லிட்டருக்கு 80 பைசா அதிகரித்து, ரூ.92.95 ஆகவும் விற்கப்படுகிறது. சிலிண்டர் விலை ரூ. 949 என்ற விலையில்டெல்லியில் விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்தின் போக்குவரத்துச் செலவு, வரிஏற்றார்போல் இந்த கட்டணம் மாறுபடும்

தொடர்ந்து விலை உயரும்

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் கூறியதாக சிஎன்பிசி வெளியிட்ட செய்தியில் “ சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் அதிகரித்துவருகிறது. இதனால், பெட்ரோல், டீசல் விலையில் சிறிது காலத்துக்கு தொடர்ந்து சிறிய அளவில் விலை ஏற்றம் இருந்துக்கொண்டே இருக்கும். இப்போதைய சூழலில் விலைக் குறைப்பு பற்றி சிந்தனையே இல்லை. மத்திய அரசும் உற்பத்தி வரி்க் குறைப்பு என்ற பேச்சைப் பற்றி பேசவில்லை. ஆதலால், உற்பத்தி வரிக்குறைப்பும் இருக்க வாய்ப்பில்லை” எனத் தெரிவித்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கடைசியாக பெட்ரோலுக்கு உற்பத்தி வரி ரூ.5, டீசல் மீது ரூ.10 குறைத்து மத்திய அரசு அறிவித்தது. இப்போதுவரை சராசரியாக உற்பத்தி வரி மட்டும் ரூ.27வரை விதிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

இது தவிர டீசலை மொத்தக் கொள்முதல் செய்பவர்களுக்கு லிட்டருக்கு ரூ.25 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. விமான எரிபொருள் கட்டணமும் கடந்த ஜனவரியிலிருந்து 50 சதவீதம் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

ஆதலால், அடுத்துவரும் நாட்களில் பெட்ரோல், டீசலில் தொடர்ந்து விலை உயர்வு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.