இந்த திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தொடங்கி வைத்த நிலையில், இடையில் உள்ளாட்சி தேர்தல் வந்ததால், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், வருகிற 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 4 நாட்கள் ரேஷன் கடைகள் மூலம் இதை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கூட்ட நெரிசலை தவிர்க்க, தெரு வாரியாக குறிப்பிட்ட நாட்களில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எந்தெந்த நாட்களில் எந்தெந்த தெருக்களில் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பை முன்கூட்டியே கடைகளின் முன்பு அட்டவணையாக ஒட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 சேர்த்தே வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதுவும் 1,000 பணத்தை இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக வெளிப்படையாக வழங்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு கொண்டுவந்தால் மட்டுமே பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கும்.

அப்படி வாங்க வரும்போது, ரேஷன் அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே பெற முடியும். ரேஷன் அட்டையில் பெயர் இல்லாதவர்கள், பெயர் உள்ளவர்களில் ஒருவரின் ஆதார் அட்டையை வைத்தோ, அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை வைத்தோ தான் பொங்கல் பரிசு தொகுப்பை பெற முடியும். இதற்கான உரிய பதிவுகள் ஒப்புதல் படிவத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.

பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்கப்பட்டவுடன், பதிவுசெய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி உடனடியாக அனுப்பப்படும். இதனால், யாரும் ஏமாற்றவோ, ஏமாறவோ முடியாது. குறிப்பிட்ட 4 நாட்களில் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்காதவர்களுக்கு, வருகிற 13-ந் தேதி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.