export of india:தமிழகம் உள்பட 6 மாநிலங்கள்தான் தேசத்தின் 75 சதவீத ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று நிதிஆயோக் தெரிவித்துள்ளது.

தமிழகம் உள்பட 6 மாநிலங்கள்தான் தேசத்தின் 75 சதவீத ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று நிதிஆயோக் தெரிவித்துள்ளது.

40ஆயிரம் கோடி டாலர்

நடப்பு நிதியாண்டில் இந்தியா 40 ஆயிரம் கோடிடாலருக்கு ஏற்றுமதி செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. நடப்பு நிதியாண்டு முடிய இன்னும் 5 நாட்கள் இருக்கும்முன்பே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

குஜராத் முதலிடம்

இந்நிலையில் நிதிஆயோக் அமைப்பு, 2021ம் ஆண்டில் அதிகமான ஏற்றுமதி செய்த மாநிலங்கள், ஏற்றுமதிக்கு ஊக்களித்தல், தயாராகுதல் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பட்டியலை வெளியி்ட்டுள்ளது. இதில் தொடர்ந்து 2-வது ஆண்டாக குஜராத் மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

தமிழகம் 4-வது இடம்

2-வது இடத்தில் மகாராஷ்டிராவும், 3-வது இடத்தில் கர்நாடகாவும், 4-வது இடத்தில் தமிழகமும்,5-வது இடத்தில் ஹரியானாவும் உள்ளன. லட்சத்தீவுகள், அருணாச்சலப்பிரதேசம், மிசோரம், லடாக், மேகாலயா ஆகியமாநிலங்கள் கடைசி இடத்தில் உள்ளன.

75 % பங்களிப்பு

நிதிஆயோக் துணைத் தலைவர் ராஜீவ்குமார் அளித்த பேட்டியில் கூறுகையில் “ இந்திய ஏற்றுமதியை அதிகப்படுத்த மத்தியஅரசு ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்துவருகிறது. மாநிலஅரசுகளும் தங்களின் தொழிற்கொள்கையை சிறப்பாகவைத்து, ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்வது அவசியமாகும். 

ஏற்றுமதியில் முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம், தெலங்கானா ஆகிய 6 மாநிலங்கள்தான் தேசத்தின் ஏற்றுமதியில் 75 சதவீத பங்கு வகிக்கின்றன.

காரணிகள்

கொள்கை, வர்த்தகச் சூழல், ஏற்றுமதிக்கான சூழல், ஏற்றமதி செயல்பாடு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து மாநிலங்கள் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. இது தவிர ஏற்றுமதி ஊக்கக் கொள்கை, தொழில்சூழல் உள்பட 11 துணைத் தூண்களை வைத்தும் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்தியாவின் ஏற்றுமதிக் கொள்கை இன்னும் பரவலாக்கப்பட வேண்டும்.” எனத் தெரிவித்தார்

வரவேற்பு

வர்த்தகச் செயலாளர் பிவிஆர் சுப்பிரமணியன் கூறுகையில், “ இந்தியாவின் ஏற்றுமதி சிறப்பாகச் செயல்பட்டு நடப்பு ஆண்டில் 40ஆயிரம் கோடி டாலரை எட்டியுள்ளது. கன்டெய்னர் பற்றாக்குறை, கப்பலில் சரக்கு ஏற்றுவதில் சிக்கல், சிப்,செமிகன்டக்டர் தட்டுப்பாடு இருந்தபோதிலும் ஏற்றுமதி அதிகரித்துள்ளது வரவேற்கத்தக்கது” எனத் தெரிவித்தார்