காசோலையின் பின்புறம் கையெழுத்து போடுவது ஏன் தெரியுமா? செக்கை பணமாக மாற்ற இது அவசியம்!
சில சந்தர்ப்பங்களில் செக் புக் பயன்படுத்த நேரிடலாம். வங்கியில் சென்று காசோலையைப் பணமாக மாற்ற வேண்டிய தேவை ஏற்படலாம். அப்போது பின்புறம் கையெழுத்து போடுவதன் அவசியம் என்ன என்பதைத் தெரிந்து வைத்திருப்பது பயனுள்ளது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு நிறைய பேர் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் செய்யப் பழகிவிட்டனர். இன்டர்நெட் பேங்கிங், UPI போன்ற பேமெண்ட் வாய்ப்புகள் உள்ளபோது காசோலையை பயன்படுத்துவது குறைந்துவிட்டது. சில சமயங்களில் காசோலை மாற்றவேண்டிய தேவை ஏற்படலாம். அப்போது பணம் பெறுவதற்கு முன் காசோலைக்குப் பின்னால் கையொப்பம் போடச் சொல்வார்கள். அதற்கு காரணம் என்ன என்பதைப் பார்க்கலாம்.
காசோலைக்குப் பின்புறம்
காசோலையைக் கொடுத்து பணம் செலுத்த வங்கிக்குப் போனால், காசோலைக்குப் பின்னால் கையொப்பம் போடச் சொல்வார்கள். செக்கில் முன்பக்கம் கொடுப்பவரின் கையொப்பம் இருக்கும்போது ஏன் இப்படி பின்னால் கையெழுத்து போடுங்கள் என்று சொல்கிறார்கள் என்ற சிலர் யோசித்திருக்கலாம். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது என நிறைய பேருக்குத் தெரிந்திருக்காது.
வங்கி அதிகாரிகள் எல்லா செக்கிலும் இப்படி கையெழுத்து போடச் சொல்லி கேட்க மாட்டார்கள். சில காசோலைகளுக்கு மட்டும்தான் பின்புறத்தில் கையொப்பமிடுவது தேவை. எந்த காசோலையில் பின்புறம் கையொப்பம் போட வேண்டும்? எந்த காசோலையில் அது தேவையில்லை என்று தெரிந்துகொள்வது நல்லது.
காசோலையின் பின்புறம் கையெழுத்து போடுவது ஏன் தெரியுமா? செக்கை பணமாக மாற்ற இது அவசியம்!
பியரர் செக், ஆர்டர் செக்
பியரர் செக் (Bearer Cheque), ஆர்டர் செக் (Order Cheque) என்று இரண்டு வகையான காசோலைகள் உள்ளன. இதில், முதல் வகையான பியரர் காசோலையில் தான் பின்புறம் கையொப்பம் வேண்டும் என்று சொல்வார்கள். மற்றொரு வகையான ஆர்டர் காசோலைக்கு பின்புறத்தில் கையெழுத்து போடுவது கட்டாயம் இல்லை.
பியரர் காசோலையை யார் வேண்டுமானாலும் வங்கியில் கொடுத்து பணத்தை வாங்கிக்கொள்ளலாம். ஆர்டர் காசோலையில், முன்பக்கத்தில் யாருடைய பெயர் எழுதப்பட்டிருக்கிறதோ அந்த நபர் மட்டுமே பணத்தைப் பெறமுடியும். அந்த நபர் காசோலையுடன் வங்கிக்கு வந்து, அதில் குறிப்பிட்டுள்ள நபர் தான் தான் என்று நிரூபிக்க வேண்டும். இதனால்தான், ஆர்டர் காசோலைக்குக் கையெழுத்து தேவையில்லை.
செக் புக் பயன்பாடு
பியரர் காசோலை மூலம் மோசடியாக யாராவது பணத்தைப் பெற்றுவிட்டால், வங்கி மீது குற்றச்சாட்டு வந்துவிடும். இதைத் தவிர்க்கவே, பியரர் காசோலையைச் செலுத்துபவரிடம் பின்பக்கத்தில் கையெழுத்து பெற்றுக்கொள்கிறார்கள். இதனால், தவறான நபருக்கு பணம் கொடுக்கப்பட்டாலும் வங்கியின் பொறுப்பு ஆகாது.
ஆர்டர் காசோலையைப் போல, ஒரு நபர் தன் சொந்தக் கணக்கில் இருந்தே காசோலை மூலம் பணம் எடுப்பதற்கும் காசோலையின் பின்புறத்தில் கையொப்பம் போட வேண்டாம். அதே நேரத்தில் செக் மூலம் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுக்கவேண்டும் என்றால் கண்டிப்பாக வங்கியில் முகவரிச் சான்று ஒன்றைக் கொடுக்கச் சொல்வார்கள் என்றும் நினைவில் கொள்ளவேண்டும்.
பணி ஓய்வுக்கு முன் இதை பண்ணிருங்க... ரூ.10 கோடி பென்ஷன் தொகை பெற இதுதான் வழி!