தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 29-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஆன்லைனில்‌ பட்டாசு விற்பனை தீவிரம் அடைந்துள்ளது. இந்த ஆண்டு 200 முதல் 300 கோடி ரூபாய் வரை ஆன்லைனில் பட்டாசு வர்த்தகம் நடைபெறும் என்று ஆன்லைன் பட்டாசு வியாபாரிகள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனா்.

தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி, சிவகாசியில் பட்டாசு விற்பனை தீவரமடைந்துள்ளது. சிவகாசிக்கே நேரில் சென்று பட்டாசு வாங்குவோர் ஒருபுறம் இருக்க, மறுபுறம், ஆன்லைனில் பட்டாசுகளை வாங்குவோர் அதிகரித்து வருகிறார்கள்.

சிவகாசியில் கிடைக்கும் நியாயமான விலைக்கே ஆன்லைனில் தரமான பட்டாசுகளை வழங்கி வருவதால் நாளுக்கு நாள் ஆன்லைனில் பட்டாசு விற்பனை அதிகரிப்பதாகவும் கூறுகிறார்கள் ஆன்லைன் பட்டாசு வர்த்தகர்கள்.

சுமார் 300 வகையான பட்டாசுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுவதோடு, ஆர்டர் செய்து ஒரு வாரத்திற்குள் வாடிகையாளர்களுக்கு கிடைக்கும் வகையில் டோர் டெலிவரி செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

சிவகாசியில் உள்ளவர்கள் கூட வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் வசிக்கும் உறவினர்களுக்கு எளிமையான முறையில் ஆன்லைன் பட்டாசுகள் அனுப்புவதாக கூறுகிறார்கள்.

கடந்த 3 ஆண்டுகளாக குறிப்பிட்ட சில பட்டாசு விற்பனை நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகத்தை நடத்தி வந்த நிலையில் இந்த ஆண்டு 250க்கும் அதிகமான பட்டாசு விற்பனை நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள‌ன.

கடந்த ஆண்டு 100 கோடி ரூபாய் ஆன்லைன் பட்டாசு வர்த்தகம் நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு வர்த்தகம் பல மடங்கு அதிகரித்து 200 முதல் 300 கோடி ரூபாய் ஆன்லைன் பட்டாசு விற்பனை நடைபெறும் என ‌வர்த்தகர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க வாட்ஸ் அப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் மூலமாகவும் பட்டாசு விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது.

ஆன்லைன் வர்த்தகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சிலர் இதனை பயன்படுத்தி தரமற்ற பட்டாசுகளை அதிக விலைக்கு விற்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் ஒரு முறைக்கு பல முறை ஆராய்ந்து ஆலோசித்து பின்னர் வாங்க வேண்டும் என வணிகர்கள் அறிவுறுத்துகின்றனர்.