NSE scam: தேசியப் பங்குச்சந்தையின் ரகசிய தகவல்களை சட்டவிரோதமாக வெளியிட்டு ஆதாயம் பார்த்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தலைமை நிர்வாகி சித்ரா ராமகிருஷ்ணாவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது. 

தேசியப் பங்குச்சந்தையின் ரகசிய தகவல்களை சட்டவிரோதமாக வெளியிட்டு ஆதாயம் பார்த்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தலைமை நிர்வாகி சித்ரா ராமகிருஷ்ணனை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது. 

கோ-லொகேஷன் ஊழல்

2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை என்எஸ்இ தலைமை நிர்வாக அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணன் இருந்தபோது நடந்தது கோ-லொகேஷன் ஊழல். அதாவது, என்எஸ்இ சர்வர்களுக்கு அருகே சில குறிப்பிட்ட பங்கு நிறுவனங்கள், தரகர்களின் சர்வர்களை வைத்து பங்குவர்த்தக தகவல்களை விரைவாக பகிர்ந்த கொள்ள உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் சிபிஐ கடந்த 2018ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது

கைது

இந்த வழக்கில் சில பங்குவர்த்தகர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறி கடந்த மாதம் 25ம் தேதி சித்ரா ராமகிருஷ்ணன் ஆலோசகராக இருந்த ஆனந்த் சுப்பிரமணியனை சிபிஐ கைது செய்தது. இந்நிலையில் இந்த வழக்கில் தன்னை கைதுசெய்யாமல் இருக்க டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் சித்ரா ராமகிருஷ்ணா முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, நேற்று இரவு சிபிஐ அதிகாரிகள், சித்ரா ராமகிருஷ்ணனை கைது செய்து மருத்துவப் பரிசோதனையை முடித்து தங்களின் தலைமை அலுவலகத்தில் உள்ள சிறையில் சித்ராவை அடைத்தனர். 

நீதிமன்றத்தில் ஆஜர்

கடந்த பிப்ரவரி மாதம் 24 மற்றும் 25ம் தேதிகளில் மும்பையில் உள்ள சித்ராவின் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டு, 3 நாட்கள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சிபிஐ அதிகாரிகளுக்கு சித்ரா ஒத்துழைக்காததால் அவரை சிபிஐ கைது செய்தது.இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் சித்ராவை இன்று பிற்பகலில் டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதியிடம் சிபிஐ தரப்பு அனுமதி கோரியது.

விசாரணைக்கு மறுப்பு

சிபிஐ தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகையில் " சித்ராவிடம் பலமுறை விசாரித்த போதிலும் எந்தவிதமான கேள்விக்கும் அவர் பதில் அளிக்க மறுக்கிறார். அனந்த் சுப்பிரமணியத்துடன் வைத்து சித்ராவை விசாரித்தோம் ஆனால், ஆனந்த் குறித்து உணர சித்ரா மறுக்கிறார். இதுவரை 2,500 மின்அஞ்சல்களை எடுத்துள்ளோம். எந்த கேள்விக்கும் பதி்ல் அளிக்கவில்லை என்பதால்தான் கைதுசெய்தோம்” என தெரிவித்தது.

7 நாட்கள் காவல்

இதற்கு சித்ரா தரப்பு வழக்கறிஞர்கள், “ கடந்த 8 நாட்களாக சிபிஐ விசாரணைக்கு சித்ரா சென்றுள்ளார். சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை கூட விசாரணைக்காகச்சென்றார். சித்ராவுடன் அவரின் 85வயதுதாயார், சகோதரி உள்ளனர். அவரின் சுதந்திரம் பாதிக்கிறது”எனத் தெரிவித்தனர்.
இருதரப்புவாதங்களையும் கேட்ட நீதிபதி, 7 நாட்கள்மட்டும் சித்ராவை சிபிஐ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்தார். 

பகவத் கீதை
இந்நிலையில் சிறையில் சித்ரா ராமகிருஷ்ணன் செயல்பாடுகள் குறித்து சிபிஐ அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “ சித்ரா ராமகிருஷ்ணா சிறைக்குச் சென்றபின், தனக்கு படிக்க பகவத் கீதை புத்தகம் தேவை அல்லது பகவத் கீதை நகல் இருக்குமா எனக் கேட்டார். தொடக்கத்தில் எந்த கேள்விக்கும் பதில் அளிக்க மறுத்தார். என்எஸ்இ தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தபோது, அவர் எடுத்த முடிவுகள் குறித்து நினைவுக்கு வரவில்லைஎன்றார்” எனத் தெரிவித்தார்