5 மாநிலத் தேர்தலுக்கு முன் பட்ஜெட் தாக்கல் வருவது குறித்து மத்தியஅரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி இருந்த நிலையில், தேர்தல் ஆதாயத்துக்காகவே எதிர்க்கட்சிகள் பட்ஜெட்டை ஒத்திவைக்க கோருகின்றன. திட்டமிட்டபடி பிப்ரவரி 1-ந்தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று மத்தியஅரசு பதில் அளித்துள்ளது. 

5 மாநிலத் தேர்தல்

வழக்கமாக பிப்ரவரி கடைசியில் தாக்கலாகும் பட்ஜெட்டை இந்த ஆண்டு முன்கூட்டியே பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அடுத்த 3 நாட்களில் 5 மாநிலத் தேர்தல்கள் வாக்குப்பதிவு தொடங்குகிறது. தேர்தலுக்கான தேதி கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டு விட்டதால், நடத்த விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டன. 

எதிர்ப்பு

ஆதலால், தேர்தல் விதிமுறைகளை மீறி மத்தியஅரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தால், அது வாக்காளர்கள் மத்தியில் ஆளும் கட்சிக்கு சாதகமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும், தேர்தல் நியாயமாக நடைபெறாது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இது தொடர்பாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, உள்ளிட்ட 11 எதிர்க்கட்சிகள் சேர்ந்து தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை மனு அளித்து தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தபின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுள்ளன.

தேர்தல் ஆணையம் கடிதம்

இதையடுத்து, தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி, மத்திய அமைச்சரவையின் செயலாளர் பி.கே. சின்ஹாவுக்கு கடிதம் எழுதி விளக்கம் அளிக்க கேட்டு இருந்தார். 

மத்தியஅரசு பதில்

இதற்கு பதில் அளித்து மத்திய அமைச்சரவை செயலர் அனுப்பிய கடிதத்தில், “ அரசியல் ஆதாயத்திற்காகவே எதிர்க்கட்சிகள் பட்ஜெட்டை ஒத்தி வைக்கக் கோருகின்றன.  தேர்தல் 5 மாநிலங்களில் மட்டுமே நடத்தப்படுகிறது.  ஆனால், பட்ஜெட் என்பது நாடுமுழுவதற்கும் பொதுவானது. ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து அனைத்துத் தரப்பு மக்களுக்கான அரசின் திட்டங்களை அமல்படுத்துவதற்காக பட்ஜெட்டை உரிய நேரத்தில் தாக்கல் செய்வது அவசியம். அதன்காரணமாகவே  முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. திட்டமிட்டபடி பிப்ரவரி முதல் தேதியன்று பட்ஜெட் தாக்கலாகும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.