Cardless Cash Withdrawal : ஏடிஎம் மையங்களுக்குச் சென்று ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை நாடுமுழுவதும் அனைத்து வங்கிகளின் ஏடிஎம்களிலும் கொண்டுவரப்படும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் இன்று அறிவித்தார்.

ஏடிஎம் மையங்களுக்குச் சென்று ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை நாடுமுழுவதும் அனைத்து வங்கிகளின் ஏடிஎம்களிலும் கொண்டுவரப்படும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் இன்று அறிவித்தார்.

நிதிக்கொள்கை கூட்டம்

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் 2 மாதங்களுக்கு ஒருமுறை கூடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்றையடுத்து, கொண்டுவரப்பட்ட லாக்டவுனில், அதாவது, 2020-ம் ஆண்டு மே 22-ம் தேதி வட்டி வீதம் வரலாற்றில் இல்லாத அளவு குறைக்கப்பட்டது. 

இன்று 10-வது நிதிக்கொள்கைக் குழுக்கூட்டம் நடந்துள்ளது. இதுவரை வட்டி வீதம் மாற்றப்படவில்லை. தற்போது குறுகியகாலக் கடனுக்கான வட்டி வீதம் 4 % என்றும், ரிவர்ஸ் ரெப்போ 3.5% என்றும் நீட்டித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறியதாவது:

கார்டு இல்லாமல் பணம்

அனைத்துவங்கிகளின் ஏடிஎம் மையங்களிலும் விரைவில் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்படும். இதன்படி யுபிஐ வசதி மூலம் பணம் எடுக்கலாம். 

தற்போதைய நிலவரப்படி ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் ஏடிஎம் மையங்கள் மிகவும் குறைந்த அளவில்தான் உள்ளன. சில வங்கிகள் மட்டும்தான் செயல்படுத்தி வருகின்றன. இனிமேல் இந்த வசதியை அனைத்து வங்கிகளின் ஏடிஎம் மையங்களிலும் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி யுபிஐ மூலம் செயல்படும். 

மோசடிகளைத் தடுக்கும்

பணப்பரிமாற்றத்தை எளிமைப்படுத்தவும், கார்டுகளின் பயன்பாட்டைக் குறைக்கவும், கார்டுகள் மூலம் நடக்கும் மோசடிகளைத் தடுக்கவும், ஏடிஎம் கார்டுகளை க்ளோனிங் செய்வதைத் தடுக்கவும் இந்த வசதி பெரிதும் உதவும்.

புத்தாக்கத்துக்கு மாறிவரும் சூழலில், பொருட்கள் மற்றும் சேவைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருகின்றன. ஆதலால் விரைவில் குழு அமைக்கப்பட்டு ரிசர்வ் வங்கிக்கு உட்பட்ட அனைத்து நிறுவனங்களிலும் வாடிக்கையாளர்களின் சேவை குறித்து ஆய்வு செய்யப்படும்.” எனத் தெரிவித்தார்

கார்டு இல்லாமல் எப்படி பணம் எடுக்கலாம்

ஏடிஎம் மையங்களில் ஏடிஎம் கார்டு இல்லாமல் கூட பணம் எடுக்கலாம். இந்த வசதியைப் பயன்படுத்த வங்கி வாடிக்கையாளருக்கு டெபிட் அல்லது கிரெடிட் கார்டு தேவையில்லை. கொரோனா காலத்தில் ஏராளமனோர் ஏடிஎம் மையங்களுக்குச் செல்வதில் தயக்கம் காட்டியதால் சில வங்கிகள் மட்டும் இந்த வசதியை அறிமுகம் செய்தது. 

குறிப்பாக எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, ஆகியவை இந்த வசதியை அறிமுகம் செய்தன. இதன்படி கார்டு இல்லாமல், மொபைல் போனில் வங்கியின் மொபைல் பேங்கிங் மூலம் பணத்தை எடுக்கலாம். வங்கியின் சர்விலிருந்து வாடிக்கையாளருக்கு ஒரு பாஸ்பேர்டு செல்போனுக்கு வரும் அந்த எண்ணை ஏடிஎம்களில் டைப் செய்து பணத்தை எடுக்கலாம்.