bpcl crude oil: இந்தியாவின் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், ரஷ்யாவின் டிராபிகுரா டீலரிடம் இருந்து மே மாதத்தில் 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்தியாவின் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், ரஷ்யாவின் டிராபிகுரா டீலரிடம் இருந்து மே மாதத்தில் 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
பொருளாதாரத் தடை
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து, அந்நாட்டின் மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதி்த்தன. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யவும் தடை விதித்தன. இதனால் ரஷ்யா தான் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெயை நட்பு நாடுகளுக்கு வரலாற்றில் இதுவரைஇல்லாத அதிரடி தள்ளுபடி விலையில் விற்கத் தயாரானது.

மலிவு விலை
இதையடுத்து, ரஷ்யாவிடம் இருந்து போர் தொடங்குதற்கு முன்பே எண்ணெய் கொள்முதல் குறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் பேசிவிட்டது. தற்போது ரஷ்ய நிறுவனங்களும் விலையைக் குறைத்துள்ளதால், 30 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை வரும் மே மாதம் ரஷ்யாவிடம் இருந்து வாங்க இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு எடுத்துள்ளது.
இந்தியாவுக்காக சந்தை விலையிலிருந்து பேரல் ஒன்றுக்கு 35 டாலர் குறைவாக கச்சா எண்ணெயை விற்பனை செய்வதாக ரஷ்யா அரசு சார்பில் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவித்தன.
20 லட்சம் பேரல்
இந்நிலையில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ரஷ்யாவின் டிராபிகுரா வர்த்தக நிறுவனம் மூலம் மே மாதம் 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவிடம் இருந்து பிபிசிஎல் நிறுவனம் வழக்கமாகக் கொள்முதல் செய்தவருகிறது. கொச்சியில் உள்ள சுத்திகரிப்பு ஆலைக்கு தினசரி 3.10 லட்சம் பேரல்கள் சப்ளை செய்யப்படுகிறது. ஆனால், தற்போதுவிலை குறைந்தபின் ரஷ்யாவிடம் பிபிசிஎல் நிறுவனம் கொள்முதல் செய்வது இது அதிகபட்சமாகும்.

1.60 கோடி பேரல்
கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் தொடங்கியபின், இதுவரை 1.60 கோடி பேரல்கச்சா எண்ணெயை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்ய இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேற்று அளித்த பேட்டியில் “ ரஷ்யாவுடன் பொருளாதார உறவுகளை ஸ்திரப்படுத்திக்கொள்ள அரசு முயன்று வருகிறது. ரஷ்யா எப்போதுமே இந்தியாவுக்கு சிறந்த பொருளாதாரக் கூட்டாளிதான். இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதாரப் பரிவர்த்தனைகள் சரி செய்யப்படும்” எனத் தெரிவித்தார்

தேசநலன்
கடந்த வாரம் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில் “ தேசநலன்தான் முக்கியம். குறைந்தவிலையில் கச்சா எண்ணெய் கிடைத்தால், அது தேசத்துக்கும்,மக்களுக்கும் நல்லது. ஆதலால், கச்சா எண்ணெய் மலிவாக ரஷ்யா வழங்கினால் அங்கு வாங்குவோம். அனைவரின் நலன்களும் மனதில் வைத்து செயல்படுவோம்”எனத் தெரிவித்திருந்தார்
