தொழிலதிபர் அனில் அம்பானி மீது ரூ.2,929 கோடி வங்கி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை புதிய வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது.
தொழிலதிபர் அனில் அம்பானி மீண்டும் பெரிய சிக்கலில் சிக்கியுள்ளார். ரூ.2,929 கோடி மதிப்பிலான வங்கி மோசடி வழக்கில் அவர்மீது அமலாக்கத்துறை (ED) புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் மூலம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்காம்) நிறுவனம் மற்றும் அம்பானி மீதான விசாரணை மேலும் தீவிரமாகும் நிலை உருவாகியுள்ளது.
இந்த வழக்கு, கடந்த மாதம் மத்திய புலனாய்வு நிறுவனம் (சிபிஐ) பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது. அந்த எஃப்ஐஆரில், அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனம் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவிடம் (எஸ்பிஐ) ரூ.2,929 கோடி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
சிபிஐ ஏற்கனவே ஆர்காம் அலுவலகம், அனில் அம்பானி வீடு மற்றும் தொடர்புடைய பல இடங்களில் சோதனை ஆவணங்களை பறிமுதல் செய்தது. இந்த சோதனையின் போது வங்கி கடன் தவறாக பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
குற்றச்சாட்டுகளின்படி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷனுக்கு வழங்கப்பட்ட கடன் நிறுவனம் குறிப்பிட்ட நோக்கங்களுக்கு அல்ல, பிற செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவே மோசடி வழக்கு பதிவு செய்ய காரணமாக அமைந்துள்ளது.
ஏற்கனவே, எஸ்பிஐ வங்கி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மற்றும் அனில் அம்பானியை “மோசடி செய்பவர்கள்” என அறிவித்தது, ரிசர்வ் வங்கிக்கு (RBI) உத்தியோகபூர்வமாக அறிக்கை அளித்திருந்தது. இப்போது ED வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், அனில் அம்பானி மீது சட்டரீதியான சிக்கல்கள் மேலும் தீவிரமாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.


