பொருளாதார விற்பனை மந்தநிலை காரணமாக முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்கள் வேலை நாள்களை குறைத்துவரும் நிலையில் அசோக் லேலண்ட் நிறுவனம் மீண்டும் 5 நாட்கள் விடுமுறையை அறிவித்துள்ளது. 

இந்தியாவில் தற்போது நிலவும் பொருளாதார மந்தநிலையால் ஆட்டோ மொபைல் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் உற்பத்தியில் முன்னணி வகித்த நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்ட் பொருளாதார மந்தநிலை காரணமாக தேக்கத்தை சந்தித்துள்ளது. விற்பனைக் குறைவு காரணமாக உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்துவது என்று முடிவெடுத்த அந்நிறுவனம் கடந்த மாதம் 5-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், எண்ணூர் தொழிற்சாலை ஊழியர்களுக்கு செப்டம்பர் 6-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை கட்டாய விடுமுறை என்று அறிவித்தது.

இந்நிலையில், மேலும் 5 நாட்கள் ஊழியர்களுக்கு வேலை இல்லா நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அசோக் லேலண்ட் அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் மந்தநிலை தொடர்வதன் காரணமாக நிறுவனத்தின் நலனுக்காக சில முக்கிய முடிவுகளை அந்நிறுவனம் எடுத்துள்ளது. அதன்படி செப்டம்பர் 28, 30 மற்றும் அக்டோபர் 1, 8, 9 ஆகிய நாள்கள் எண்ணூர் தொழிற்சாலைக்கு வேலையில்லா நாட்களாக அறிவித்துள்ளது. 

இந்த நாட்களில் ஊழியர்கள் யாரும் நிறுவனத்திற்கு வரவேண்டாம். இந்த நாட்களில் சம்பளம் தொடர்பாக ஊழியர் சங்கத்தினருடன் கலந்து ஆலோசித்த பிறகு முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.