சாம்சங் நிறுவனத்திற்கு எதிரான காப்புரிமை வழக்கில் ஆப்பிள் நிறுவனத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் அந்நிறுவனத்திற்கு சாதகமாக வாஷிங்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆப்பிள் ஃபோன்களில் உள்ள காப்புரிமை பெற்ற சில வசதிகள் பொதுவானவை என சாம்சங் நிரூபிக்க தவறிவிட்டதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில்‌ கூறியுள்ளனர். எனவே ஆப்பிள் நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்‌தனர்.

இதைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்திற்கு சுமார் 800 கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டிய கட்டாயம் சாம்சங்கிற்கு ஏற்பட்டுள்ளது. இதே வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் சாம்சங்கிற்கு சாதகமாக தீர்ப்பு வந்திருந்த நிலையில் மேல்முறையீடு செய்து ஆப்பிள் வெற்றிபெற்றுள்ளது. சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு இடையிலான மற்றொரு காப்புரிமை வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது.

உலகின் முன்னணி மொபைல் போன் நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் சாம்சங் ஆகியவை பரஸ்பரம் தங்களது காப்புரிமைகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டி கடந்த 2012ஆம் ஆண்டு முதல் நீதிமன்ற படியேறி வருகின்றனர். இந்த தொடர்ச்சியான சட்டப்போராட்டம் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 5 மற்றும் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ் 3 ஆகிய மாடல் போன்களை வெளியிட்டது முதல் நடந்துவருகிறது.