ஆதார் எண் பாதுகாப்பானது தானா என்ற ஐயம் மக்களின் மனங்களில் இதுவரை அகலாத நிலையில் பல லட்சம் ஸ்மார்ட் போன்களில் திடீரென ஆதார் தொடர்பு எண் தானாக பதிவான நிகழ்வு பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் வைத்திருப்போரின் போன்களுக்கு நேற்று UIDI என்ற பெயரில் 18003001947 என்ற எண் பதிவானது. 

அது போனில் உள்ள தொடர்புகள் பதிவு பகுதியில் தானாக சேமிக்கப்பட்டது. இந்த எண்ணானது ஆதார் எண் தொடர்பான சந்தேகங்களுக்கு பயன்படுத்தப்படுகின்ற, இந்திய தனிநபர் தனித்துவ அடையாள ஆணையத்தின் தொடர்பு எண் ஆகும். இதை அறிந்த மக்கள் தங்களது ஆதார் மற்றும் அது தொடர்பான தகவல்கள் திருடப்பட்டுவிட்டதோ என்று திகைப்புக்கு உள்ளாகினர். இது தொடர்பாக ஆதார் ஆணையத்திடம் ஏராளமானோர் தொலைபேசியில் அழைத்து விளக்கம் கேட்டனர். இதற்கு பதிலளித்துள்ள ஆதார் ஆணையம் யாரோ வேண்டாதவர்கள் செய்கின்ற வேலை என்று கூறியுள்ளது. 

அதேநேரம் ஐ-போன் மற்றும் சாதாரண போன்களில் இந்த தொடர்பு எண் பதிவாகவில்லை. 4 நாட்களுக்கு முன்பு தனது ஆதார் எண்ணை ட்விட்டரில் வெளியிட்ட தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மாவின் அனைத்து அந்தரங்க தகவல்களை பிரான்ஸ் நாட்டுக்காரர் ஒருவர் அப்போதே திருடி வெளியிட்டார். 

இந்நிலையில் தற்போது ஆதார் உதவி எண் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் இந்த உதவி எண்ணை தாங்கள் தான் ஆண்ட்ராய்டு போனில் வெளியிட்டதான கூகுல் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.  2014-ம் ஆண்டில் இருந்தே ஸ்மார்ட் போன்களில் இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூகுல் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.