இந்தியாவுக்கு தான் கெத்து! ஹைதரபாத்தில் உருவாகும் கூகுள் அலுவலகத்தைப் பாராட்டும் ஆனந்த் மஹிந்திரா!
கூகுளின் ஹைதராபாத் அலுலவக வளாகம் முக்கிய புவிசார் அரசியல் குறியீடு என்று தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டியுள்ளார்.
கூகுளின் நிறுவனத்தின் மிகப்பெரிய அலுவலகம், அமெரிக்காவில் மவுண்டன் வியூ தலைமையகம் தான். தற்போது ஹைதராபாத்தில் உருவாகிவரும் பிரம்மாண்டமான அலுவலகம் அமெரிக்காவுக்கு வெளியே கூகுளின் மிகப்பெரிய அலுவலகமாக இருக்கப்போகிறது.
இந்தச் செய்தி மஹிந்திரா நிறுவனத் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவையும் கவர்ந்துள்ளது. இந்தக் கட்டடம் முக்கிய புவிசார் அரசியல் குறியீடு என்று அவர் பாராட்டியுள்ளார். கட்டப்பட்டுவரும் ஹைதராபாத் கூகுள் அலுவலக வளாகத்தின் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து, தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ஆனந்த் மஹிந்திரா.
“இது ஒரு புதிய கட்டடம் பற்றிய செய்தி மட்டும் அல்ல. இதை என் மனதில் பதிய வைத்து யோசித்துப் பார்த்தேன். கூகுள் போன்ற உலகளாவிய நிறுவனம் அமெரிக்காவிற்கு வெளியே ஒரு குறிப்பிட்ட நாட்டில் தனது மிகப்பெரிய அலுவலகத்தை உருவாக்க முடிவு செய்கிறது என்றால், அது வணிகம் தொடர்பான செய்தி மட்டும் அல்ல, அது ஒரு புவிசார் அரசியல் குறியீடு" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். "இறுதியாக, இப்போது எல்லாமே இங்கே நடக்கிறது…” என்றும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையின் மையமான கச்சிபௌலியில் 7.3 ஏக்கர் நிலப்பரப்பில் 3.3 மில்லியன் சதுர அடியில் கூகுள் வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கட்டுமானப் பணியின் நிலவரம்தான் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
நீண்ட காலமாக உருவாகிவரும் இந்த நீள்வட்ட வடிவ அலுவலகம் 2026ஆம் ஆண்டின் மத்தியில் கட்டிமுடிக்கப்படும் என்று கட்டுமானப் பணியைச் செய்துவரும் லண்டனைச் சேர்ந்த ஆல்ஃபோர்ட் ஹால் மோனகன் மோரிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஹைதராபாத் கூகுள் அலுவலக வளாகத்தில் சுமார் 18,000 பணியாளர்கள் வேலை பார்க்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தார் ராணுவ ரகசியத்தைக் கசியவிட்ட 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை; தடுத்து நிறுத்த முயலும் இந்தியா