எதிர்ப்பு இருந்தாலும் பரவாயில்லை…இந்தியாவில் ரூ.7,100 கோடி முதலீடு: அமேசான் நிறுவனர் அதிரடி அறிவிப்பு....
சிறுவணிகர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்தியா வந்துள்ள அமேசான் சிஇஓ ஜெப் பிஜோஸ், இந்தியாவில் சிறு மற்றும் நடுத்தர வணிகத்தில் டிஜிட்டல் மயமாக்க ரூ.7,100 கோடி(100கோடி டாலர்) முதலீடு செய்யப்படும் என அறிவித்துள்ளார்
அமெரிக்காவை சேர்ந்த உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் தனது வர்த்தகத்தை நடத்தி வருகிறது. அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அளிக்கும் அதிரடி சலுகைகளால் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளின் விற்பனை பாதிக்கிறது.
இதனால் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் சலுகை விற்பனைக்கு சில்லரை விற்பனையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பிஜோஸ் டெல்லியில் நடக்கும் சம்பவ் நிகழ்ச்சியில் பங்ேகற்க 3நாள் பயணமாக இன்று டெல்லி வந்துள்ளார்.
ஜெப் பிஜோஸ் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அருக்கு எதிராக நாடு முழுவதும் 300 நகரங்களில் அவருக்கு எதிராக போராட்டம் நடத்த அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சி.ஏ.ஐ.டி.) திட்டமிட்டுள்ளது. இந்த போராட்டத்தில் சுமார் 1 லட்சம் வர்த்தகர்கள் பங்கேற்பார்கள் என சி.ஏ.ஐ.டி. தெரிவித்துள்ளது.
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் பெரிய அளவில் சலுகைகளை வழங்குவதாகவும், அன்னிய முதலீடு விதிமுறைகளை மீறியதாகவும் சி.ஏ.ஐ.டி. பல ஆண்டுகளாக குற்றச்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இந்திய போட்டிவர்த்தக ஆணையம்(சிசிஐ) விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது இந்நிலையில் டெல்லியில் இன்று நடந்த சம்பவ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமேசான் நிறுவனர் ஜெப் பிஜோஸ் நிகழ்ச்சியில் பேசுகையில் “ இந்தியாவில் சிறு, குறு வணிகத்தை டிஜிட்டல் மயமாக்க ரூ.7,100 கோடி முதலீடு செய்யப்படும்.
இந்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தை பயன்படுத்தி 2025-ம் ஆண்டுக்குள் 25,000 கோடி முதலீடு செய்யப்படும். இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்புறவு 21-ம் நூற்றாண்டில் மிக முக்கியமான கட்டத்தை எட்டும். இந்திய நூற்றாண்டாக இருக்கப்போகிறது.
இந்தியாவின் சுறுசுறுப்பான இயங்குதன்மை, உத்வேகம், வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. இந்தியாவின் ஜனநாயகமே சிறப்புக்குரியது” எனத் தெரிவித்தார்
முன்னதாக டெல்லி வந்த ஜெப் பிஜோஸ், ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் சென்று அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.