பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் 2022 M4 காம்டீஷன் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 

பி.எம்.டபிள்யூ. நிறுவனம் புத்தம் புதிய M4 காம்படீஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மாடல் துவக்க விலை ரூ. 1.44 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய தலைமுறை பி.எம்.டபிள்யூ. M4 மாடல் 2020 செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய M4 மாடல் ஸ்டிரெயிட் 6 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆல்-வீல் டிரைவ், முற்றிலும் புதிய டிசைன் வழங்கப்பட்டு உள்ளது. M மாடல் என்பதால் இந்த மாடலில் முற்றிலும் புதிதாக உருவாக்கப்பட்ட டுவின் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட 3 லிட்டர், ஸ்டிரெயிட் 6 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. காம்படீஷன் மாடலில் இந்த என்ஜின் 510 ஹெச்.பி. திறன், 650 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

இதே என்ஜின் ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் X3M மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் இது 480 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகிறது. இத்துடன் ZF 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. முதல் முறையாக M4 மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.5 நொடிகளில் எட்டிவிடும். இதன் அதிக வேகம் மணிக்கு 250 கிலோமீட்டர் என கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய பி.எம்.டபிள்யூ. M4 மாடலில் அளவில் பெரிய கிரில் செங்குத்தாக பொருத்தப்பட்டு இருக்கிறது. முன்புற கிரில் பக்கவாட்டு பகுதிகளில் அடாப்டிவ் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் மற்றும் லேசர் சைட்கள் உள்ளன. இத்துன் கம்பீரமான முன்புற பம்ப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் ஸ்லோபிங் கூப் ரூஃப்லைன், முன்புற ஃபெண்டர்களில் ஏர் டக்ட்கள், பிளாக்டு-அவுட் 19 அல்லது 20 இன்ச் ஃபோர்ஜ் செய்யப்பட்ட அலாய் வீல்கள் உள்ளன.

பின்புறம் பூட்-மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர், கூர்மையான ரியர் பம்ப்பகர், மல்டி-சேனல் டிஃப்யூசர், பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்ட டெயில் பைப்கள் உள்ளன. முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது புதிய M4 அளவில் 108mm நீளமும், 18mm அகலம், 1mm உயரமாக இருக்கிறது. இதன் வீல்பேஸ் 2857mm அளவிலும், 45mm நீளமாகவும் இருக்கிறது. புதிய காரின் கேபின் முந்தைய மாடல்களில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய பி.எம்.டபிள்யூ. M4 மாடலில் 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்ப்ளே, 3 ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 16 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், ஆம்பியண்ட் லைட்டிங், ஹெட்-அப் டிஸ்ப்ளே, முன்புறம் பவர்டு சீட்கள், லம்பர் சப்போர்ட், வயர்லெஸ் சார்ஜிங், போன் இண்டகிரேஷன் மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன. பாதுகாப்பிற்கு இந்த காரில் ஆறு ஏர்பேக், ABS, டைனமிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் (DSC), கார்னெரிங் பிரேக் கண்ட்ரோல் (CBC) மற்றும் இதர அம்சங்கள் உள்ளன.

இந்திய சந்தையில் பி.எம்.டபிள்யூ. M4 மாடல் CBU முறையில் கொண்டு வரப்படுகிறது. இந்த மாடல் ஆடி RS5 ஸ்போர்ட்பேக் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.