இந்தியாவில் டெஸ்லா கார் தொழிற்சாலை! ரூ.20 லட்சம் முதல் மின்சார கார் விற்க திட்டம்!
இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு கார்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளதால், இந்தியாவை ஏற்றுமதித் தளமாகப் பயன்படுத்த முயற்சி செய்வதாகத் தெரிகிறது.
இந்தியாவில் ஆண்டுக்கு 5 லட்சம் மின்சார வாகனங்கள் தயாரிக்கும் திறன் கொண்ட கார் தொழிற்சாலையை அமைப்பதற்கான முதலீட்டு முன்மொழிவுக்காக டெஸ்லா நிறுவனம் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
மின்சார வாகனங்களின் விலை 20 லட்சம் ரூபாயில் இருந்து தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது. இது அதிகாரபூர்வ தகவல் இல்லை என்றாலும் இதனை உறுதிபடுத்த டெஸ்லா நிறுவனத்தைத் தொடர்புகொண்ட ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திறகு டெஸ்லா தரப்பில் பதில் கிடைக்கவில்லை.
உலகின் நம்பர் ஒன் பணக்காரரும் டெஸ்லா உள்ளிட்ட பல நிறுவனங்களின் உரிமையாளருமான எலான் மஸ்க், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு கார்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளதால், இந்தியாவை ஏற்றுமதித் தளமாகப் பயன்படுத்த முயற்சி செய்வதாகத் தெரிகிறது.
கடந்த மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது எலான் மஸ்க்கை சந்தித்து உரையாடினார். அப்போது இந்தியாவில் குறிப்பிடத்தக்க முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்திருந்தார்.
உலகின் மிகவும் புகழ்பெற்ற வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டெஸ்லா தனது உலகளாவிய உற்பத்தியை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக மெக்சிகோ நாட்டில் ஒரு ஜிகாஃபாக்டரியைத் திறப்பதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்தது.
எலான் மஸ்க் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு புதிய தொழிற்சாலைக்கான இடத்தைத் தேர்ந்தெடுக்க இருப்பதாகக் கூறினார். அந்தத் தொழிற்சாலை இந்தியாவில் அமையும் என்ற கேள்விக்கு பதில் அளித்த் அவர், நிச்சயமாக அதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
விரைவில் இந்தியாவில் ஒரு உற்பத்தித் மையத்தை நிறுவுவதற்கான திட்டங்களைப் பற்றியும் டெஸ்லா தீவிரமாக ஆலோசித்து வருகிறது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியிருந்தார்.