இது சூப்பர் கான்செப்ட்... வீல் சேர் வசதியுடன் சூப்பர் ஸ்மார்ட் கார்! ஆனந்த் மஹிந்திரா ஆச்சரியம்!
ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கார் குறித்த ஐடியாவை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
தனித்துவமான மற்றும் புதுமையான முன்முயற்சிகளை ஆதரிக்கும் வழக்கம் கொண்ட தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, மாற்றுத்திறனாளிகளுக்கு பயனளிக்கும் ஒரு அற்புதமான யோசனையைப் பாராட்டி இருக்கிறார்.
மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலியை இணைத்து மாற்றியமைக்கப்பட்ட காரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. இந்த வித்தியாசமான ஐடியா மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட்டான தீர்வை வழங்குகிறது. இந்த் வடிவமைப்பு மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திராவின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், இது மிகவும் புத்திசாலித்தனமான பயனுள்ள யோசனை என்று பாராட்டியுள்ளார். மேலும், ஸ்டார்ட்அப்பில் முதலீடு செய்ய விருப்பம் உள்ளவர்கள் இதை ஐடியாவை நிஜமாக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
Massimo என்ற ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. காரின் மேற்கூரையில் வைக்கப்பட்டிருக்கும் சக்கர நாற்காலியை மாற்றுத்திறனாளி ஒருவர் அணுகுவது போன்ற காட்சி வீடியோவில் இடம்பெற்றுள்ளது. ஒரு பட்டனை அழுத்தியதும் சக்கர நாற்காலி மேலேயிருந்து கீழே இறங்குகிறது.
இந்தப் பதிவைப் பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா, “சூப்பர் ஸ்மார்ட்டான மிக பயனுள்ள வடிவமைப்பு. எங்கள் வாகனங்களிலும் இந்த அம்சம் இருந்தால் நான் பெருமைப்படுவேன். ஆனால் வெகுஜன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஆட்டோமொபைல் நிறுவனத்துக்கு அதைச் செய்வது கடினம். இதற்கு ஒரு தொடக்கம் தேவை. அதற்கு நான் விருப்பத்துடன் முதலீடு செய்வேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ பகிரப்பட்டதில் இருந்து, 4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த காரை சமூக வலைத்தளப் பயனர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.