ராயல் என்ஃபீல்டின் காண்டினென்டல் ஜிடி 650, எல்இடி டர்ன் இன்டிகேட்டர்கள் மற்றும் யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போன்ற புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. ராக்கர் ரெட் வேரியன்டில் கருப்பு நிற இன்ஜின் மற்றும் அலாய் வீல்கள் போன்ற தோற்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ராயல் என்ஃபீல்டின் பிரபலமான கஃபே ரேசர் பைக்கான காண்டினென்டல் ஜிடி 650, சில புதிய மாற்றங்களுடன் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. பைக்கின் தோற்றம் மற்றும் பயன்பாட்டில் சில புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த புதிய கான்டினென்டல் ஜிடி 650-ன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3,58,427 ஆக உள்ளது. குறிப்பாக எல்இடி டர்ன் இன்டிகேட்டர்கள் மற்றும் யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் வசதி ஆகியவை முக்கியமான புதிய அம்சங்களாக உள்ளன. மேலும், இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலைச் சுற்றி கருப்பு நிற பூச்சு கொடுக்கப்பட்டுள்ளதால் பைக்கின் தோற்றம் முன்பைவிட சற்று ஸ்டைலாக மாறியுள்ளது.

ராக்கர் ரெட் வேரியன்டில் புதிய லுக்

ராக்கர் ரெட் நிற மாடலில் சில முக்கியமான தோற்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் இன்ஜின் மற்றும் எக்ஸாஸ்ட் பகுதிகளுக்கு கருப்பு நிற பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அலாய் வீல்களும் கருப்பு நிறத்தில் உள்ளன. இதனால் இந்த மாடல் முழுவதும் கருப்பு நிற தோற்றத்தில் மிகவும் ஸ்போர்ட்டியாக காட்சியளிக்கிறது. அபெக்ஸ் கிரே மாடலிலும் இதே போன்ற கருப்பு நிற தோற்றம் ஏற்கனவே உள்ளது. மறுபுறம், பிரிட்டிஷ் ரேசிங் கிரீன் மற்றும் மிஸ்டர் கிளீன் நிற மாடல்களில் பாலிஷ் செய்யப்பட்ட இன்ஜின் தோற்றம் மற்றும் ஸ்போக் வீல்கள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.

இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை

புதிய கான்டினென்டல் ஜிடி 650-ன் இன்ஜினில் எந்த பெரிய மாற்றமும் செய்யப்படவில்லை. முந்தைய மாடலில் பயன்படுத்தப்பட்ட அதே 648 சிசி, இரண்டு சிலிண்டர், காற்று மற்றும் எண்ணெய் குளிரூட்டும் இன்ஜின்தான் இதிலும் உள்ளது. இந்த இன்ஜின் 7,150 ஆர்பிஎம்மில் 47 குதிரைத்திறன் மற்றும் 5,250 ஆர்பிஎம்மில் 52.3 என்எம் டார்க் திறனை வழங்குகிறது. அதனுடன் 6 வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு மற்றும் ஹாரிஸ் பெர்ஃபாமன்ஸ் இணைந்து உருவாக்கிய ஸ்டீல் ஃபிரேமும் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. அதனால் புதிய மாடலில் முக்கியமாக தோற்றம் மற்றும் பயன்பாட்டு வசதிகளில்தான் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சஸ்பென்ஷன் மற்றும் வடிவமைப்பு

சஸ்பென்ஷனைப் பொறுத்தவரை, முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் கேஸ்-சார்ஜ்டு இரட்டை ஷாக் அப்சார்பர்களும் உள்ளன. கான்டினென்டல் ஜிடி 650-ன் தனித்துவமான எரிபொருள் டேங்க், தாழ்வான ஓட்டுநர் நிலை மற்றும் ஸ்போர்ட்டியான கஃபே ரேசர் வடிவமைப்பு ஆகியவை தொடர்ந்து இடம்பெறுகின்றன. 1950 மற்றும் 1960 காலகட்ட கஃ ரேசர் பைக்குகளின் தோற்றத்தைக் கொண்டு இந்த வடிவமைப்பு, புதிய மாடலிலும் மாற்றமின்றி தொடர்கிறது. புதிய யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் வசதி நீண்ட பயணங்களின்போது கைபேசியை சார்ஜ் செய்ய உதவும்.

புதிய கான்டினென்டல் ஜிடி 650 விலை

ராக்கர் ரெட் மற்றும் பிரிட்டிஷ் ரேசிங் கிரீன் மாடல்களின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3,58,427 ஆக உள்ளது. அபெக்ஸ் கிரே மாதலின் விலை ரூ.3,80,921, மிஸ்டர் கிளீன் மாதலின் விலை ரூ.3,87,667 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய மாடலில் எல்இடி டர்ன் இன்டிகேட்டர்கள், யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் வசதி மற்றும் சில தோற்ற மாற்றங்கள் வந்துள்ளன. ஆனால் இன்ஜின், கியர்பாக்ஸ் மற்றும் முக்கிய மெக்கானிக்கல் பாகங்களில் பெரிய மாற்றம் இல்லை. எனவே, கான்டினென்டல் ஜிடி 650-ன் பழைய கஃபே ரேசர் தோற்றத்தை விரும்புபவர்களுக்கு, புதிய வசதிகளுடன் இந்த மாடல் தொடர்ந்து கவனிக்கத்தக்க தேர்வாக உள்ளது.