அடுத்த தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் கார்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்தியாவில் மாருதி ஸ்விஃப்ட் கார்கள் அதிக அளவில் விற்பனையாகின்றன. அதன் ஸ்டைலிஷ் லுக், பட்கெட், மைலேஜ் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்திய சாலைகளை பெரும்பாலும் மாருதி ஸ்விஃப்ட் கார்கள் அலங்கரிக்கின்றன. இந்த நிலையில், அடுத்த தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் கார்களுகளின் உலகளாவிய அறிமுகத்துக்கு ஜப்பானிய வாகன உற்பத்தியாளரான சுஸூகி தயாராகி வருவதால், வாகன ஆர்வலர்கள் மத்தியில் அதுகுறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சமீபத்திய தகவல்களின்படி, அடுத்த தலைமுறை ஸ்விஃப்ட் கார் மாடல்கள், வருகிற அக்டோபர் மாதம் ஜப்பானிய மோட்டார் ஷோவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புதிய ஸ்விஃப்ட் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த தலைமுறை ஸ்விஃப்ட் கார்களின் தோற்றம், உட்புறம், அம்சங்கள் மற்றும் பவர்டிரெய்ன் உள்ளிட்டவைகளில் கணிசமான மாற்றங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் காருக்கு புதிய வலுவான ஹைப்ரிட் பெட்ரோல் எஞ்சினை சுஸூகி வழங்கவுள்ளது. புதிய ஹைபிரிட் பவர்டிரெய்னை டொயோட்டா உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதைய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் கார்கள், 1.2-லிட்டர் டூயல் ஜெட், டூயல் விவிடி மோட்டார் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 89 பிஎச்பியையும், 4,400 ஆர்பிஎம்மில் அதிகபட்சமாக 113 என்எம் ஆற்றலையும் உற்பத்தி செய்கிறது. 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு அட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்கள் உள்ளன. இதுவே, அடுத்த தலைமுறை ஸ்விஃப்ட் கார்களிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், புதிய மின்மயமாக்கப்பட்ட பவர்டிரெய்ன் அம்சமும் இணைக்கப்படலாம் என வதந்திகள் பரவுகின்றன. ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை உள்ளடக்கியதாக இருக்கும் எனவும் அவை கூறுகின்றன.
அதேசமயம், பவர்டிரெய்ன் விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், ஹைப்ரிட் பவர்டிரெய்ன் அம்சமானது மேம்பட்ட செயல்திறன் மற்றும் மைலேஜை வழங்கும். அதன்படி, அடுத்த தலைமுறை ஸ்விஃப்ட் கார்களின் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 35 அல்லது 40 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும், அடுத்த தலைமுறை ஸ்விஃப்ட் கார்கள் அதன் தற்போதைய வடிவமைப்பில் இருந்து பெரிய அளவில் மாற்றத்தை கொண்டிருக்காது என்கிறார்கள். புதிய டிசைனில் சிறிய அளவிலான மாற்றங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. சதுரமான ஹெட்லேம்ப்கள் மற்றும் அவற்றுக்கிடையே அகலமான கிரில் இருக்கும் என தெரிகிறது.
பின்புற கதவு கைப்பிடிகள் கதவின் மேலே இல்லாமல், வழக்கமான கைப்பிடிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கேபினுக்குள் நவீன தொழில்நுட்ப அமைப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், மேம்படுத்தப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமான பெரிய டச்-ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பாக இருக்கும் என தெரிகிறது. வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், 360 டிகிரி வீடியோ சிஸ்டம், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளேக்கள் இருக்கலாம்.
பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை அதிகரிக்கும் பல்வேறு அதிநவீன கண்டுபிடிப்புகளுடன் புதிய மாடல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, புதிய ஸ்விஃப்ட் காரானது ஆறு ஏர்பேக்குகளை கொண்டிருக்கலாம். இது ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.
