ஜிஎஸ்டி சீர்திருத்தத்தின் பலனால் லெக்ஸஸ் கார்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ES 300h முதல் LX 500d வரை அனைத்து மாடல்களிலும் குறிப்பிடத்தக்க விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. புதிய விலைகள் செப்டம்பர் 22, 2025 முதல் அமலுக்கு வரும்.
மத்திய அரசின் ஜிஎஸ்டி சீர்திருத்தத்தின் பலன்கள் தற்போது ஆடம்பர கார் சந்தையிலும் தெரிகிறது. ஜப்பானிய ஆடம்பர கார் நிறுவனம் லெக்ஸஸ் இந்தியா, தனது அனைத்து மாடல்களுக்கும் விலை குறைப்பை தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி குறைப்பின் முழுப் பலனையும் வாடிக்கையாளர்களுக்கு தருவதாக நிறுவனம் உறுதியளித்துள்ளது. புதிய விலைகள் செப்டம்பர் 22, 2025 முதல் அமலுக்கு வரும். பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு அசத்தலான பரிசாக இருக்கும். லெக்ஸஸ் மாடல்களில் குறிப்பிடத்தக்க விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
ES 300h ஹைப்ரிட் செடான் ரூ.1.47 லட்சம் குறைவில் கிடைக்கிறது. NX 350h SUV விலையில் ரூ.1.6 லட்சம் வரை குறைப்பு. RX தொடர் கார்கள் அதிகபட்சம் ரூ.2.58 லட்சம் குறைவு. LM 350h MPV மாடல் ரூ.5.77 லட்சம் குறைவாக விற்பனைக்கு வரும். அதேசமயம், LX 500d முழு அளவிலான SUV விலையில் ரூ.20.8 லட்சம் என்ற மிகப்பெரிய குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவைக் குறித்து லெக்ஸஸ் இந்தியா தலைவர் ஹிகாரு இக்யூச்சி, “இந்த வரலாற்று சிறப்புமிக்க வரி மாற்றத்திற்கு இந்திய அரசுக்கு நன்றி. பலனையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்கள் கூடுதல் ஆடம்பர அனுபவத்தைப் பெறுவார்கள்” என்று தெரிவித்தார்.
விலை குறைப்பால், லெக்ஸஸ் கார்கள் ஜெர்மன் போட்டியாளர்களான மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற பிராண்டுகளுக்கு சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக ரூ.20 லட்சத்திற்கும் அதிக விலை குறைப்பு பெற்ற LX 500d SUV, லெக்ஸஸின் முக்கிய கவனம் ஈர்க்கும் மாடலாக மாறியுள்ளது.
பண்டிகை காலத்தில் ஆடம்பர கார் தேவை அதிகரிக்கும் நிலையில், இந்த விலை குறைப்பு விற்பனைக்கு பெரிய ஊக்கத்தை அளிக்கிறது. மொத்தத்தில், புதிய விலைப்பட்டியலுடன், லெக்ஸஸ் இந்திய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்புமிக்க ஆடம்பர கார் பிராண்டாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
