உள்நாட்டு எலக்ட்ரிக் கார் நிறுவனங்களுக்கு குட் நியூஸ்! EV உற்பத்தியை ஊக்குவிக்க புதிய சலுகை!
டெஸ்லா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏதேனும் சலுகை கொடுத்தால், அது பல உள்நாட்டு கார் தயாரிப்பாளர்களைப பாதிக்கும்.
உள்நாட்டிலேயே எலெக்ட்ரிக் கார்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் கொள்கையை உருவாக்கும் பணியில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா மற்றும் வியட்நாமைச் சேர்ந்த கொண்ட வின்ஃபாஸ்ட் போன்ற வெளிநாட்டு எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளர்கள் இந்தியாவில் கார் விற்பனை செய்ய ஆர்வம் காட்டும் நிலையில் அரசு புதிய கொள்கை முடிவு குறித்து ஆலோசிக்கிறது.
மத்திய அரசின் இந்தப் புதிய மின்சார வாகனக் கொள்கை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் உள்நாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்கள், வெளிநாட்டில் இருந்து வரும் புதிதாக இந்தியாவுக்கு வர விரும்பும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு சலுகைகள் அளிப்பது குறித்து கவலை கொண்டுள்ளனர்.டெஸ்லா மற்றும் பிற வெளிநாட்டு மின்சார கார் உற்பத்தியாளர்களுக்கு சலுகைகளை வழங்குவது ஏற்கனவே இந்தியாவில் உள்ள நிறுவனங்களின் முதலீடுகளை மோசமாக பாதிக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், மின்சார வாகனங்களின் உற்பத்தியை ஊக்குவிக்க வழங்கப்படும் எந்தவொரு சலுகையும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமின்றி உள்நாட்டு நிறுவனங்களுக்கும் சமமாக அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவுக்கு இறக்குமதி வரியில் அரசாங்கம் ‘சிறப்பு’ சலுகைகளை வழங்கக்கூடும் என்று உள்நாட்டு எலக்ட்ரிக் கார் நிறுவனங்கள் கவலை அடைந்துள்ளனர்.
டெஸ்லாவின் தொழிற்சாலை இந்தியாவில் முழுமையாக செயல்படத் தொடங்கும் வரை, வாகனங்களை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்க டெஸ்லா விரும்புகிறது. இதற்காக தொழிற்சாலை திறக்கும் வரை சுங்க வரியைக் குறைக்க வேண்டும் கோருகிறது.
இருப்பினும், குறிப்பிட்ட நிறுவனத்துக்கு மட்டும் எந்த விதிவிலக்குகளுக்கும் கொடுக்க முடியாது என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. எனவே, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கு சமமான சலுகைகளை அறிவிக்கலாம் என்று முடிவு செய்துள்ளது என மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
"அரசாங்கத்தின் அணுகுமுறை ஒட்டுமொத்த தொழில்துறைக்கானதாக இருக்கும். எந்தவொரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கும் அல்ல. ஏனெனில் இந்தத் துறையில் மிகவும் வலுவான உள்நாட்டு நிறுவனங்கள் உள்ளன" என்று அந்த அதிகாரி சொல்கிறார்.
உள்நாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கவலைகளை இன்னும் மத்திய அரசிடம் முறைப்படி முன்வைக்கவில்லை. இருந்தாலும், வெளிநாட்டில் நிறுவனங்களுக்கு இறக்குமதி வரியில் ஏதேனும் சலுகை கொடுத்தால், அது பல உள்நாட்டு கார் தயாரிப்பாளர்களைப பாதிக்கும் என்று கருதுகின்றனர்.