இந்து மதத்தில் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதிலும் ஆஷாட பௌர்ணமியான குரு பௌர்ணமி ரொம்பவே விசேஷமானது. இந்த நாளில் குருவை வணங்குவதோடு, லட்சுமி மற்றும் குபேரரின் அருளைப் பெற சில எளிய பரிகாரங்களையும் செய்யலாம்.
குரு பௌர்ணமி 2026: அற்புத சுப யோகங்களும், செல்வ வளம் பெருக்கும் சிறப்பு வழிபாடுகளும்!
ஆன்மீக ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் மிகவும் சக்திவாய்ந்த நாட்களில் ஒன்றாகக் கருதப்படுவது ஆஷாட மாதத்தில் வரும் பௌர்ணமி தினமாகும். இந்த புனிதமான நாள் உலகம் முழுவதிலும் உள்ள சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களால் 'குரு பௌர்ணமி'யாகக் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 2026-ஆம் ஆண்டில் இந்தச் சிறப்புமிக்க திருநாள் ஜூலை 29-ஆம் தேதி வருகிறது.
மகாபாரதம், 18 புராணங்கள் மற்றும் நான்கு வேதங்களை வகுத்துத் தந்த 'வேத வியாச மகரிஷி' அவதரித்த திருநாளே குரு பௌர்ணமி ஆகும். அதனால் தான் இந்த திருநாளை 'வியாச பௌர்ணமி' என்றும் அழைப்பார்கள். நமது வாழ்க்கையில் அஞ்ஞானம் என்னும் இருளை நீக்கி, மெய்ஞானம் என்னும் ஒளியை ஏற்றும் குருமார்களையும், வழிகாட்டிகளையும் நினைவுகூர்ந்து அவர்களின் அருளைப் பெறும் ஒப்பற்ற நாளாக இது திகழ்கிறது.
அபூர்வ சுப யோகங்களின் சங்கமம்
2026 குரு பௌர்ணமி மிகவும் விசேஷமானது. ஏனெனில், இந்நாளில் 'ப்ரீத்தி யோகம்' மற்றும் 'ஆயுஷ்மான் யோகம்' ஆகிய இரண்டு மிகச் சக்திவாய்ந்த சுப யோகங்கள் ஒன்றாக இணைய்கின்றன.
ப்ரீத்தி யோகம்: குடும்பத்தில் அன்பையும், மனித உறவுகளில் இணக்கத்தையும் அதிகப்படுத்தி, மன அமைதியைத் தரும்.
ஆயுஷ்மான் யோகம்: நீண்ட ஆயுளையும், நோயற்ற உடலாரோக்கியத்தையும், செய்யும் காரியங்களில் தொடர் வெற்றியையும் தரக்கூடியது.
இந்த இரட்டை சுப யோகங்கள் கூடிவரும் வேளையில் செய்யப்படும் வழிபாடுகள், தான தர்மங்கள் மற்றும் தியானங்கள் பல மடங்கு அதிகமான நற்பலன்களைத் தரும் என்பது ஜோதிட சாஸ்திர விதியாகும்.
லட்சுமி, கணபதி மற்றும் குபேர வழிபாடு: நிதி நிலைமை மேம்பட! குரு பௌர்ணமி நாளில் ஆன்மீக குருவை வழிபடுவதுடன், மகாலட்சுமி, கஜானன கணபதி மற்றும் தன காரகனான குபேரரையும் தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும். வறுமை மற்றும் கடன் தொல்லைகளால் அவதிப்படுபவர்கள், இந்நாளில் விநாயகருக்கு அருகம்புல் சாற்றி, மகாலட்சுமி மற்றும் குபேரருக்கு மஞ்சள், குங்குமம் மற்றும் நாணயங்கள் சமர்ப்பித்து வழிபாடு செய்வது விசேஷம்.இந்த முக்கூட்டு வழிபாடு உங்கள் வீட்டில் உள்ள தரித்திரங்களை விரட்டி, ஸ்திரமான நிதி நிலைமையையும், அளவற்ற செல்வப் பெருக்கையும் ஏற்படுத்தித் தரும்.
விஷ்ணு-லட்சுமி பூஜை மற்றும் தாமரை மலர் சமர்ப்பணம்
ஜோதிட ரீதியாக பௌர்ணமி திதி சந்திரனுக்கும், லட்சுமி தேவிக்கும் மிகவும் உகந்த நாளாகும். குரு பௌர்ணமி அன்று, மகாலட்சுமிக்கு உகந்த தாமரை மலரை அர்ப்பணித்து, ஸ்ரீ மகாவிஷ்ணுவையும் சேர்த்து வழிபட வேண்டும். ஸ்ரீமன் நாராயணனின் நெஞ்சில் உறைபவள் மகாலட்சுமி. எனவே, லட்சுமி நாராயணரை ஒன்றாக வழிபடும்போது வீட்டில் சுபிட்சமும், தம்பதியரிடையே ஒற்றுமையும் நிலைக்கும். தொழிலில் நிலவி வந்த தடைகள் நீங்கி, புதிய வருமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் என்பது ஆன்மீக நம்பிக்கை.
கமலக்கட்டை மாலையும், சக்திவாய்ந்த மகாலட்சுமி மந்திரமும்
குரு பௌர்ணமியின் சுப யோக நாளில், அபரிமிதமான செல்வ ஈர்ப்புச் சக்தியைப் பெற ஒரு அற்புதமான பரிகாரம் உள்ளது. தாமரையின் விதைகளிலிருந்து செய்யப்படும் 'கமலக்கட்டை மாலை' (தாமரை மணி மாலை) கொண்டு மகாலட்சுமி மந்திரத்தை ஜபிப்பது அளப்பரிய பலன்களைத் தரும்.
மகாலட்சுமி மூல மந்திரம்:
“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:”
மாலை நேரத்தில், சுத்தமான ஆடை உடுத்தி, கிழக்கு நோக்கி அமர்ந்து கமலக்கட்டை மாலையைக் கொண்டு இம்மந்திரத்தை 108 முறை ஜபித்து வர, கடன் சுமை குறையும்; முடங்கிக் கிடந்த பண வரவுகள் தடையின்றி கைக்கு வந்து சேரும்.
மாலையில் நெய் தீப பரிகாரமும், லட்சுமி கடாட்சமும்
பௌர்ணமி நாளன்று மாலை வேளையில் (பிரதோஷ/சந்தியா காலம்) வீட்டின் பிரதான வாசல்படியில் இருபுறமும் பசு நெய் தீபம் ஏற்றுவது மிகவும் சக்திவாய்ந்த பரிகாரமாகும். வீட்டின் நுழைவாயில் வழியேதான் லட்சுமி தேவி வீட்டிற்குள் வருகிறாள் என்பது ஐதீகம். பிரதான வாசலில் ஏற்றப்படும் நெய் தீபம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை (Negative Energies) விரட்டியடித்து, நேர்மறை அதிர்வுகளை (Positive Vibes) அதிகரிக்கும். இதனால் லட்சுமி கடாட்சம் நிலைத்து நின்று, குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்திருக்கும்.
குரு பௌர்ணமியில் செய்ய வேண்டிய தானங்கள்
இந்த சுப யோக நாளில் ஏழை எளியவர்களுக்கும், சாதுக்களுக்கும் ஆடை தானம், அன்னதானம் மற்றும் கல்வி உபகரணங்கள் தானமாக வழங்குவது குரு பகவானின் பூரண அருளைப் பெற்றுத் தரும். குறிப்பாக கொண்டைக்கடலை சுண்டல், தயிர் சாதம் அல்லது மஞ்சள் நிற இனிப்புகளை தானமாக அளிப்பது ஜாதகத்தில் உள்ள குரு தோஷங்களை நிவர்த்தி செய்யும்.


