காயத்ரி ஜெயந்தி என்பது காயத்ரி தேவியின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. வேதங்களின் சாரமாக போற்றப்படும் காயத்ரி மந்திரத்தின் அதிதேவதையான காயத்ரி தேவியை வழிபடுவதற்கு இது சிறந்த நாளாகும்.
காயத்ரி ஜெயந்தி 2025
காயத்ரி ஜெயந்தி என்பது இந்து மதத்தில் முக்கிய புனித நாளாக கருதப்படுகிறது. காயத்ரி மந்திரம் விஸ்வாமித்திரர் வெளிப்பட்ட நாளாக இது கொண்டாடப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் நிலவும் கிரக நிலைகள், ராகு கேதுவின் வலுவான செல்வாக்கு ஆகியவற்றின் காரணமாக காயத்ரி ஜெயந்தி அதிக முக்கியத்துவம் பெறுகிறது. ராகு மற்றும் கேது ஆகிய இரு நிழல் கிரகங்களால் ஏற்படும் குழப்பம், தடைகள் ஆகியவற்றை அனுபவிப்பவர்களுக்கு காயத்ரி ஜெயந்தி தீர்வை வழங்க இருக்கிறது. ஆகஸ்ட் 9 அன்று கொண்டாடப்படும் காயத்ரி ஜெயந்தி ராகு மற்றும் கேதுவின் தோஷங்களை குறைப்பதற்கான பரிகாரங்களை செய்வதற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. ராகு-கேது தோஷத்தால் அவதிப்படுபவர்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ராகு-கேது ஏற்படுத்தும் விளைவுகள்
ஜோதிட சாஸ்திரத்தின் படி ராகு மற்றும் கேது ஆகிய இரண்டு கிரகங்களும் பௌதீக கிரகங்கள் அல்ல. அவை நிழல் கிரகங்களாகும். இவை கடந்த கால கர்மா, மாயைகள் ஆகியவற்றை குறிக்கின்றன. ராகு ஆசைகள், திடீர் மாற்றங்கள், கோபம் ஆகியவற்றுடன் தொடர்புடையவர். அதே நேரத்தில் கேது பற்றின்மை மற்றும் கர்ம கடனுடன் தொடர்புடையவர். ஒருவர் ஜாதகத்தில் இந்த இரு நிழல் கிரகங்களின் ஆற்றல்கள் சமநிலையற்றதாக இருக்கும் பொழுது ராகு கேது தோஷங்கள் ஏற்படக்கூடும். இது குழப்பம், தொழிலில் பின்னடைவு, குடும்ப பிரச்சனை, உணர்ச்சிப் போராட்டங்கள் ஆகிய பின்னடைவுகளுக்கு வழி வகுக்கலாம். இந்த இரண்டு கிரகங்களையும் அமைதி படுத்த காயத்ரி ஜெயந்தி சிறப்பு நாளாகும். காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதும், குறிப்பிட்ட பரிகாரங்களை செய்வதும் அவற்றின் எதிர்மறை விளைவுகளை குறைத்து தெளிவு, அமைதியை கொண்டு வரும்.
ராகு கேது விளைவுகளை குறைக்கும் காயத்ரி ஜெயந்தி
மற்ற கிரகங்களைப் போல் அல்லாமல் ராகுவும் கேதுவும் கர்ம குணம் கொண்டவர்கள். கடந்த கால செயல்கள் மற்றும் தீர்க்கப்படாத கர்ம குணங்கள் மூலம் வாழ்க்கையை பாதிக்கின்றன. அவற்றின் ஆற்றல் பிரச்சனைகளை பெரிதாக்கி தனி நபர்களை வளர்ச்சியை பாதித்து பின்னோக்கி தள்ளும் சூழ்நிலைகளை உருவாக்குகிறது. இந்த கிரகங்களின் செல்வாக்கிற்கு ஆட்பட்டவர்களுக்கு உறுதியற்ற தன்மை, திடீர் நிதி இழப்பு, எதிர்பாராத இழப்புகள், வருமானத்தில் ஏற்ற இறக்கங்கள் ஆகியவை ஏற்படலாம். இந்தப் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு காயத்ரி ஜெயந்தி போன்ற சக்தி வாய்ந்த தினங்கள் உதவுகின்றன. தெய்வீக ஆசிகளைப் பெறுவதன் மூலம் ராகு மற்றும் கேதுவின் தீய தாக்கத்தை குறைக்க முடியும்.
எளிய பரிகார முறைகள்
இந்த தினத்தில் வீட்டில் எளிய முறையில் காயத்ரி தேவியை வழிபட வேண்டும். காயத்ரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதால் அதை உச்சரிப்பதற்கு முன்னர் உடல் மற்றும் மனம் இரண்டையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதிகாலையில் எழுந்து குளித்து சுத்தமான ஆடைகளை உடுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். வீட்டில் காயத்ரி தேவியின் திருவுருவப்படம் அல்லது சிலைகளை ஒரு மணப்பலகையில் வைத்து அலங்கரிக்க வேண்டும். மாலை மலர்கள் அணிவித்து தீபம் ஏற்ற வேண்டும். பின்னர் காயத்ரி தேவிக்கு முன்பாக சிறிய ஹோமம் போல வளர்த்து அதில் நெய், எள், சந்தனம் ஆகியவற்றை புனித நெருப்பில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த சடங்கானது கர்ம வடிவங்களை சுத்தப்படுத்தி, ராகு மற்றும் கேதுவின் எதிர்மறை சக்திகளை நடுநிலையாக்குகிறது. பின்னர் சுத்தமான இடத்தில் அமர்ந்து கிழக்கு நோக்கி தியானம் செய்ய வேண்டும். தியானத்தை முடித்த பின்னர் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க தொடங்க வேண்டும். இந்த மந்திரத்தை 108, 1008 என்ற எண்ணிக்கையில் உச்சரிக்கலாம். முடிந்தால் 1,00,008 முறை உச்சரிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மந்திரம் உச்சரிக்கும் பொழுது காயத்ரி தேவியையும், சூரிய பகவானையும் நினைத்து நம் அறிவு மற்றும் ஞானம் பெருக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
காயத்ரி மந்திரந்தின் பலன்கள்
காயத்ரி மந்திரத்தின் பொருள், “எவர் நம் அறிவை தூண்டி பிரகாசிக்க செய்கிறாரோ அந்த ஜோதிமயமான இறைவனை தியானிப்போமாக” என்பதாகும். இந்த மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது அதன் பொருளை உணர்ந்து உச்சரிப்பது மிகுந்த பலன்களைத் தரும். மாணவர்கள் இந்த நாளில் காயத்ரி மந்திரத்தை உச்சரித்தால் கல்வியில் சிறந்து விளங்குவர். அவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும். காயத்ரி மந்திரங்களை தொடர்ந்து உச்சரிப்பதன் மூலம் பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கி வாழ்க்கையில் நன்மை பெருகும். இந்த மந்திரம் மனதை அமைதிப்படுத்தி நேர்மை எண்ணங்களை உருவாக்கும். மனக்கவலை நீங்கும். கர்ம வினைகளை நீக்கி வாழ்க்கையில் ஏற்படும் தடைகளையும் தகர்க்கும். ராகு கேது தோஷம் இருப்பவர்கள் கிரகங்களுக்கு ஏற்ற வகையில் தானம் செய்ய வேண்டும். ராகுவுக்கு கருப்பு எள், கடுகு எண்ணெய் ஆகியவற்றை தானம் செய்யலாம். ஏழைகளுக்கு போர்வைகள் தானம் செய்யலாம்.
தானம் செய்ய வேண்டிய பொருட்கள்
கேதுவுக்கு விலங்குகளுக்கு உணவு தேவைப்படும் நபர்களுக்கு துணி அல்லது உணவு, தேங்காய் போன்றவற்றை தானமாக அளிக்கலாம். ராகு மாயைகளையும், மனத்தின் மூடு பனியையும் உருவாக்குகிறார். அதே நேரத்தில் கேது பற்றின்மை மற்றும் தனிமையை ஏற்படுத்துவார். காயத்ரி மந்திரமானது எண்ணங்களை சமநிலைப்படுத்தி, கவனத்தை வழிப்படுத்தி, கிரக விளைவுகளை குறைக்க உதவுகிறது. ராகுவும், கேதுவும் பாம்புகள் மற்றும் விலங்குகளுடன் தொடர்புடையவர்கள். எனவே இந்த நாளில் பசுக்கள் பறவைகளுக்கு உணவளிப்பது கர்ம சுமைகளை குறைத்து நேர்மறை ஆற்றல்களை ஈக்கும் என்று நம்பப்படுகிறது.
காயத்ரி மந்திரம்:
"ஓம் பூர்புவஸ் ஸுவ தத்ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன் ப்ரசோதயாத்"
காயத்ரி ஜெயந்தி அன்று, நாம் முழு பக்தியுடன் காயத்ரி தேவியை வழிபட்டு, காயத்ரி மந்திரத்தை உச்சரித்தால், நமது வாழ்க்கையில் அனைத்துத் துன்பங்களும் நீங்கி, அமைதியும், வெற்றியும் உண்டாகும். ராகு-கேதுவால் ஏற்படும் தடைகள் விலகும்.
