Aadi Perukku 2023 : நாளை ஆடி பதினெட்டாம் பெருக்கு... நல்ல நேரம் மற்றும் பலன்கள் இதோ..!!
ஆடிப்பெருக்கு தமிழ்நாட்டின் மிக முக்கியமான கொண்டாட்டங்களில் ஒன்றாகும். ஆடி மாதத்தில் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது.
ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் விழாவே ஆடிப்பெருக்கு ஆகும். இதனை கிராமங்களில் ஆடி 18 ஆம் பெருக்கு என்று கூறுவர். மேலும் மக்கள் இந்நாளில் ஆறுகளை வணங்கி புனித நீராடுவர். குறிப்பாக காவிரி நதி பாயும் பகுதிகளில் இவ்விழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும். அதுபோல் ஆறுகளில் மக்கள் பயன்பாட்டிற்காக படித்துறைகள் இருக்கும். அவை 18 படிகளை கொண்டிருக்கும். ஆடிப்பெருக்கன்று தான் விவசாயிகள் தங்களது உழவுப் பணிகளைத் தொடங்குவார்கள். இந்நாளில் விரதமிருந்து இறைவனை வழிபட்டால் செல்வ வளமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வீட்டில் இருந்து வழிபடும் முறை
ஒருவேளை உங்களால் ஆறுகளுக்கு சென்று ஆடிப்பெருக்கை கொண்டாட முடியவில்லை என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். வீட்டிலிருந்தபடியே ஆடிப்பெருக்கை கொண்டாட, விரதம் இருந்து, பல வகையான உணவுகளை சமைத்து, வீட்டு வாசல் முன் கோலமிட்டவும். பின் காவிரி, வைகை மற்றும் தாமிரபரணியை நினைத்து முழுமனதுடன் அவற்றை வணங்கி ஆடி 18 ஆம் பெருக்கு நாளைக் கொண்டாடுங்கள்.
இதையும் படிங்க: Aadi Perukku 2023: ஆடிப்பெருக்கு குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..!!
ஆடிப்பெருக்கு பலன்கள்
- ஆடிப்பெருக்கு அன்று கன்னி தெய்வத்தை வழிபடுவோருக்கு சிறந்த கணவர் அமையும் என்பது நம்பிக்கை.
- இந்நாளில் புது மணப்பெண்கள் புதிய மஞ்சள் கயிறு மாற்றிக்கொள்வதும், சுமங்கலி பெண்கள் தாலி பிரித்தும் போடுவது வழக்கம். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களது கணவரின் ஆயுள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
- அதுபோல் குழந்தை பாக்கியம் வேண்டி இருப்போருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்தாண்டு ஆடிப்பெருக்கு எப்போது?
இந்தாண்டு ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 03ஆம் தேதி வருகிறது. அதாவது நாளை தான் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. அன்று துவிதியை திதியும், பிற்பகல் வரை அவிட்டம் நட்சத்திரமும் பிறகு சதயம் நட்சத்திரமும் வருகிறது என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Aadi Month 2023: இன்று ஆடி மாதப்பிறப்பு.. ஆடி மாதத்தின் சிறப்புகள் என்னென்ன? முழு விவரம் இதோ!!
நல்ல நேரம் எப்போது?
ஆடிப்பெருக்கு நாளை வருகிறது. நாளை வியாழக்கிழமை என்பதால் அன்று காலை 10.45 முதல் 11.45 வரை மட்டுமே நல்ல நேரம் ஆகும். மேலும் மாலையில் நல்ல நேரம் கிடையாது. காலை 6 முதல் 07.30 வரை எமகண்டம், பகல் 01.30 முதல் 3 வரை ராகு காலமம் ஆகும். எனவே, காலை 07.35 மணிக்கு மேல் வழிபாட்டினை தொடங்கி, பகல் 01.15 மணிக்கு முன்னதாக முடித்து விடுவது நல்லது ஆகும்.
ஆடிப்பெருக்கு ஏன் கொண்டாடுகிறோம்?
ஆடி மாதம் மழைக்காலத்தின் துவக்கம் ஆகும். இம்மாதத்தில் அதிக மழை பெய்து காவிரியில் புது வெள்ளம் கரை புரண்டு ஓடும். மேலும் காவிரியில் நீர் பெருகும். எனவே தான் இந்நாளை வரவேற்கும் விதமாகவும், காவிரி அன்னையை வணங்கும் விதமாகவும் ஆடிப்பெருக்கு நாள் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்நாளில் தான் விவசாயிகள் வயல்களில் விதை விதைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.