புயல் சூழலை சமாளிக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது… முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்!!

Dec 9, 2022, 9:37 PM IST

அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் புயல் சூழ்நிலையை வெற்றிகரமாக கையாளலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக சென்னை எழிலகத்திலுள்ள மாநில அவசர செயல்பாட்டு மையத்தை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்களின் பாதுகாப்பிற்காக எல்லாவித நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறேன்.

இதையும் படிங்க: தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

அதுமட்டும் இல்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மானிட்டரிங் ஆபிசர் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களும் அந்தந்த பகுதிகளுக்கு சென்று கவனித்து, என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே எவ்வளவு மழை வந்தாலும் எவ்வளவு காற்றடித்தாலும் அதை சமாளிப்பதற்கும், அதிலிருந்து மக்களை காப்பதற்கும் இந்த அரசு உரிய நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.

இதையும் படிங்க: மாண்டஸ் புயல் - மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை சேதம்!

சில முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். சில முகாம்களில் தங்க வைக்கப்பட வேண்டிய சூழ்நிலை வரவில்லை. மக்களுக்கு உரிய வகையில் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது, மக்களும் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். பொதுமக்கள் அரசு மூலமாக எடுக்கப்படும் எல்லா நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு தந்தால், சூழ்நிலையை வெற்றிகரமாக கையாளலாம் என்று தெரிவித்துள்ளார்.