Oct 15, 2024, 10:40 PM IST
இந்த வருடம் வழக்கத்தை விட 15 நாட்களுக்கு முன்னதாகவே வடகிழக்கு பருவமழையானது தமிழகத்தில் தொடங்கி இருக்கிறது. தலைநகர் சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் அநேக இடங்களில் மாலை நேரங்களில் மிதமானது முதல் அதிகனத்த மழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, மதுரை, சிவகங்கை மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் சூறைய காற்றுடன் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு தொடர்ச்சியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் சென்னை மக்கள் தங்கள் வாகனங்களை நீரில் இருந்து பாதுகாக்க, உயரமான இடங்களில் நிறுத்தி வைத்து வருகின்றனர். இதனால் வேளச்சேரி மேம்பாலம் ஒரு மினி பார்க்கிங் லாட் போல இப்போது மாறி இருக்கிறது என்றே கூறலாம். இந்த சூழலில் நேற்று மாலை சென்னையில் மழை நீர் தேங்கும் என்று எதிர்பார்க்கப்படும் இடங்களை தமிழகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்ட நிலையில், தற்போது வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று பார்வையிட்டு வந்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.