Premalatha : "போதை தமிழகமாக மாற்றியுள்ளது திமுக அரசு" - ஓசூரில் அனல் பறக்க பிரச்சாரம் செய்த பிரேமலதா!

Mar 30, 2024, 7:22 PM IST

ஓசூரில், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார். ஓசூர் ராம்நகர் பகுதியில் திரண்டு இருந்த பொதுமக்களிடையே அவர் பேசினார். அப்போது பேசிய அவர்,

ஏடிஎம்கே என்பது நான்கு எழுத்து டிஎம்டிகே என்பது நான்கு எழுத்து கூட்டணி என்பது நான்கு எழுத்து, நாற்பதும் நமதே என்று பேசிய அவர், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பட்டதாரி அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் பேசிய அவர், தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கும், கஞ்சா விற்பனையும், போதை தமிழகமாக மாற்றி இருக்கிறது. ஆளும் திமுக அரசு, ஜிஎஸ்டி என்ற ஒரு வரியை விதித்து மத்திய அரசு அனைவருக்கும் மிகப்பெரிய தோல்வியை ஏற்படுத்தி உள்ளது. மக்களுடைய கோரிக்கை என்னவென்றால் நமது வேட்பாளர்கள் வெற்றி பெற்று டெல்லிக்கு சென்று ஜிஎஸ்டியை உடனடியாக திரும்பபெற செய்ய வேண்டும், இங்கே இருக்கக்கூடிய சிறு சிறு தொழிலாளர்கள் வியாபாரிகள் அனைவரும் ஜிஎஸ்டியால் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். 

பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு, அனைத்து அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு என்ற நிலையை மாற்றி, இருண்ட தமிழகம் மக்களுக்கான தமிழகமாக மாற்றியே தீருவோம் என்று உறுதியாக கூறி கொள்கிறேன் என தெரிவித்தார்.