Mar 17, 2024, 7:46 PM IST
நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்திய ஜனநாயகம் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, வேலூரில் லாங்கு பஜார் சண்டே மார்க்கெட்டில் பிரச்சாரம் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்.. பபூனாக, ஹீரோவாக, வில்லனாக எல்லா வேஷமும் பிரதமர் மோடி போட்டுக்கொண்டு இருக்கிறார். என்னை விட பெரிய நடிகனாக பிரதமர் இருக்கிறார் என்றார்.
பிரச்சாரத்தன் பொழுது அங்குள்ள வியாபாரிகளிடம் வாக்குகளை சேகரித்தார். மேலும், இவர் வந்ததை அறிந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பெண்கள் என அனைவரும் அவருடன் இணைந்து தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அதனைத் தொடர்ந்து அண்ணா கலையரங்கம் அருகே உள்ள மசூதியில் தொழுகையில் ஈடுபட்டார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில், வேலூர் சென்னைக்கு அருகாமையில் இருப்பதாலும் நான் இங்கேயே வீடு எடுத்து தங்கி மக்கள் சேவை செய்ய உள்ளேன். வேலூரில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக உள்ளது பாலாறு பிரச்சனை சரி செய்ய இங்கே போட்டியிடுகிறேன். கதிர் ஆனந்த் மற்றும் ஏ.சி.எஸ் ஆகியோர் வேலூரில் பலம் பொருந்தியவர்கள். அவர்கள் களம் காண உள்ள நிலையில், இந்த தேர்தலை நீங்கள் பொதுமக்களிடம் எந்தவிதத்தில் கையாளுவீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு.
அவர்கள் பெரிய பழம் தின்னு கொட்டை போட்டவர்கள். அவர்களை வீழ்த்த நான் எளிமையை கையாள போகிறேன். திமுக பாஜக கட்சிகள் 70 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆண்டுகொண்டு இருக்கிறார்கள். அவர்கள் தேர்தல் சமயத்தில் லட்சம் லட்சமாக மக்களுக்கு பணம் கொடுக்கலாம், அதனால் மக்கள் பயனடையட்டும்.
ஜெகத்ரட்சகன் போன்றவர்கள் பிணவறையில் பணத்தை அடுக்கி வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். நான் எளியவர்களுக்கான ஆட்சியை உருவாக்க வந்துள்ளேன் மக்களுக்கான உழைப்பாளியாக நான் இருப்பேன்.
நான் பாராளுமன்றத்தில் மக்களுக்காக போராட முடியும். அவர்கள் வேண்டுமா? இல்லை நான் வேண்டுமா? என மக்கள் தீர்ப்பளிப்பார்கள்.
பிரதமர் மோடி ஒழுங்கா ஆட்சி நடத்தியிருந்தால் எல்லா தரப்பு மக்களையும் சமமாக நடத்தி இருந்தல் அவர் தமிழகத்தில் கூனு கும்பிடு போட்டு குனியவேண்டியதில்லை. தேர்தல் திருவிழா என்று பிரதமரே சொல்கிறார். அதில், அவரே பபூன், அவரே ஹீரோ, அவரரே வில்லன் என எல்லா வேஷமும் பிரதமர் மோடி போட்டுக்கொண்டு இருக்கிறார். என்னை விட பெரிய நடிகனாக பிரதமர் இருக்கிறார் என்றார் மன்சூர் அலிகான்.