Mar 5, 2024, 11:57 AM IST
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வெள்ளகோவில் அடுத்துள்ள புஷ்பகிரி மலை அடிவாரத்தில் தமிழச்சி வள்ளி கும்மி ஆட்டம் 100வது அரங்கேற்றம் நடைபெற்றது. 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சினிமா நடிகர் ரஞ்சித் பார்வையிட்டு மெய்சிலிர்த்தார். கலைகளை மீட்டெடுக்கும் பயணமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அடுத்துள்ள புஷ்பகிரி மலை அடிவாரத்தில் வள்ளியரச்சல் தமிழச்சி வள்ளி கும்மி ஆட்டம் 100வது அரங்கேற்றம் நேற்று இரவு நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர். முதல் வள்ளி கும்மியாட்டம் துவங்கிய இடத்திலேயே 100வது நிகழ்ச்சியை அரங்கேற்றி பெண்கள் ஆர்ப்பரிப்பு செய்தனர். இதில் சினிமா நடிகர் ரஞ்சித் கலந்துகொண்டு சிறுமிகள், பெண்களின் நடத்தை பார்வையிட்டு மெய்சிலிர்த்தார்.
மேலும் கொங்கு மண்டலத்தில் வள்ளி கும்மியாட்டக் கலை புத்துணர்ச்சி பெற்று வருகின்றது. பண்டைய காலத்தில் கும்மியாட்டம் அனைவராலும் ரசிக்கப்பட்ட கலையாக இருந்து வந்துள்ளது. காலமாற்றத்தால் கும்மி பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. வைகாசியில் கொண்டாடப்படும் மாரியம்மன் திருவிழாவின் போது முளைப்பாரி எடுத்து கும்மியடிக்கின்றனர். இந்த கும்மியாட்டத்தின் போது நாட்டுப்புறப் பாடல்களும், பாரதியார், பாரதிதாசன் பாடல்களும் சுவாமி பாடல்களும் பாடப்படுவதுண்டு.
அகநானூற்றிலும், சிலப்பதிகாரத்திலும் கும்மி பற்றிய குறிப்புகள் உள்ளன. திரைப்படம், தொலைக்காட்சி, பேண்ட் வாத்தியம், இன்னிசை கச்சேரி போன்றவற்றாலும் வள்ளி கும்மி மீது மக்களுக்கு நாட்டம் குறைய தொடங்கியது. அழிந்து வந்த கும்மியாட்டக் கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வள்ளி கும்மி ஆட்டம் கலை பயிற்சியை ஒரு சில ஆசிரியர்கள் இலவசமாக அளித்து வருகின்றனர்.
இந்த சேவை இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள், குடும்ப பெண்கள் ஆகியோரிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. மேலும் இந்த வள்ளி கும்மி ஆட்டத்தில் ஈடுபடுவது உடற்பயிற்சி செய்வதற்கு சமமான ஒரு கலையாகும். இதனால் எப்பொதும் மனது புத்துணர்ச்சியுடன் இருக்கும் என்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ரஞ்சித் கூறுகையில், மண் சார்ந்த ஒரு கலாசாரமாக கும்மி ஆட்டங்கள் தற்போது வரவேற்பு பெற்றுள்ளது. இன்றைய காலகட்டத்தில் அதிகமான கலைகள் அழிந்து கொண்டு வருகிறது. அந்த நிலையில் இந்த தமிழச்சி வள்ளி கும்மி ஆட்ட குழுவினர் பெரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை கலந்து கொள்வது அடுத்த தலைமுறைக்கு இந்த கலையை எடுத்துச் செல்கின்றனர்.
சமுதாயத்திற்கு நாம் என்ன செய்கின்றோம் என்பதை விட இது போன்ற விஷயங்களை எடுத்துச் சொல்வதே ஆகச் சிறந்தது. இன்றைய காலகட்டங்களில் இளைஞர் மற்றும் பெண்களிடையே பொழுது போக்குவதற்காக செல்போன், ஆன்லைன், சமுக ஊடகங்கள் ஆகியவைகள் நாகரிகங்கள் இல்லாமல் நம் கலாசாரத்தை சீரழித்துக் கொண்டுள்ளது. மேலும் இன்றைய காலகட்டங்களில் செல்போன்கள் கையில் இல்லை என்றால் கஞ்சா குடித்து கை நடுங்குவதை போல ஆகி விடுகின்றனர். அனால் இவர்களெல்லாம் 5 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை இந்த கும்மியாட்டங்களில் ஈடுபடுகின்றனர். இதுபோல் மண் சார்ந்த விஷயங்களில் ஈடுபடும் கலைஞர்களை நான் மிகவும் மதிக்கின்றேன் என்றார்.