Jan 30, 2024, 7:15 PM IST
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு கிராமத்தில் உள்ள தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் பழங்கால பொருட்கள், பண்ணாட்டு நாணயங்கள் மற்றும் பல்வேறு தேசங்களில் கரன்சிகளை காட்சிப்படுத்தும் வகையில் பன்முக கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் உலகில் உள்ள 200க்கும் மேற்பட்ட தற்போதைய நாடுகள் மற்றும் முந்தைய ஒன்றியங்களின் கரன்சிகள் ஒரு அறையில் வரிசைப்படுத்தப்பட்டு அந்த நாட்டின் வரைபடத்தோடு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அதேபோல் அதற்கு அடுத்த அறையில் அந்த நாட்டு நாணயங்கள், அந்த நாட்டின் சிறப்புகள் மற்றும் நாட்டின் வரைபடத்தோடு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
பல்வேறு நாடுகளின் நாணயங்கள் மட்டுமின்றி ஆங்கிலேயர் காலத்து நாணயங்கள் மற்றும் கரன்சிகள், மன்னர் காலத்து நாணயங்கள், காலத்தில் கிடைக்கப்பட்ட பல்வேறு தொன்மை வாய்ந்த பொருட்கள் என பல்வகையான வரலாற்று சிறப்புமிக்க பொருட்களும் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
அத்தோடு பள்ளியின் மேல் வளாகத்தில் இருந்த அறையில் பண்டைய காலம் தொடங்கி தற்போதைய காலம் வரை ஒவ்வொரு வகையான உபகரணங்களும் அடைந்துள்ள நுட்ப வளர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக அனைத்து விதமான தொழில்நுட்பங்களின் வளர்ச்சிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
அந்த வகையில் அலைபேசி, தொலைபேசி, வானொலி பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி, தானியங்கள் சேமித்து வைக்கும் தாலி தானியங்களை அரைக்கும் பண்டைய கால உபகரணங்கள், தானியங்களை சேகரித்து வைக்கும் சிறிய அளவிலான குப்பிகள், பண்டைய கால ஆயுதங்கள் தொடங்கி தற்போதைய நவீன கால ஆயுதங்கள் வரை பல்வேறு வகையான தொழில்நுட்ப வளர்ச்சிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த கண்காட்சியில் ஆலங்குடி, கொத்தமங்கலம், கீரமங்கலம், வடகாடு, கரம்பக்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்களும், மாணவர்களும் கலந்து கொண்டு கண்காட்சியை பயனுள்ள வகையில் கண்டு அறிவுத்திறனை வளர்த்துக் கொண்டனர்.