கோவில் உண்டியலை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்; கேமரா முன்பாக நக்கல் செய்துவிட்டு ஓட்டம்

Dec 11, 2023, 8:15 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஊரின் பொதுக் கோவிலாக  முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் நேற்று இரவு 11 மணியளவில் சுவர் ஏறிக் குதித்த திருடர்கள் அம்மனின் கருவறைக்கு முன்னதாக இருந்த உண்டியலை உடைத்து பணம், மாங்கல்யம் உள்ளிட்டவற்றை திருடியதோடு, அதற்கு முன்பாக இருந்த இரும்பு உண்டியலையும் உடைக்க முயற்சி செய்துள்ளனர்.

அதற்குள் அருகில் இருப்பவர்கள் சத்தம் கேட்டு ஓடிவந்ததால் அவர்களை அரிவாளைக் காட்டி மிரட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள சிசிடிவி காட்சிகளில், முதலில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் கோவிலின் சுற்றுப்பாதையில் வாகனத்தை ஓட்டி உளவு பார்க்கிறார். பின்னர் கோவிலிலிருந்து சற்று தொலைவில் உள்ள நெடுஞ்சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்திக் காத்திருக்கிறார்.

இதனையடுத்து அவருடன் வந்த கருப்பு வேட்டி துண்டு அணிந்த நபரும், பச்சை வேட்டி மஞ்சள் டிசர்ட் அணிந்த நபரும் சிசிடிவி கேமரா இல்லாத இடமாக பார்த்து சுவற்றில் ஏறிக் குதித்து கோவிலுக்குள் வந்து உண்டியலை ஆட்டிப் பார்க்கிறார். பின்னர் அம்மனை வழிபட்டு விட்டு அங்கிருந்து சென்று மற்றொருவரையும் அழைத்து வருகிறார்.

அப்போது வந்த மஞ்சள் டிசர்ட் அணிந்த நபர் டிசர்டால் முகத்தை மூடி வந்த நிலையில் சிசிடிவி கேமராவைப் பார்த்ததும் டிசர்டை இறக்கி விட்டு தனது முகத்தை கேமரா முன்னதாகக் காட்டி பழிப்பு செய்கிறார். இதனையடுத்து இருவரும் சேர்ந்து எவர்சில்வர் உண்டியலை தூக்கிச் செல்கின்றனர்.

கீரமங்கலம் பகுதியில் கடந்த இரு மாதங்களுக்குள்ளாக அதிகரித்துள்ள திருட்டு சம்பவங்களின் காரணமாக கீரமங்கலம் சுற்றுவட்டார பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். கீரமங்கலம் காவல்துறையினர் மற்றும் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் நிறைய சிசிடிவி கேமாரக்களை பொருத்தியும், ரோந்துப் பணியை அதிகரித்தும் கண்காணிப்பை தீவிரப் படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.