நாகை நகராட்சி அலுவலகத்தில் புகுந்து ரகளை செய்த திமுக கவுன்சிலரின் கணவர்; பேனரை அகற்றியதால் ஆவேசம்!!

Mar 22, 2024, 12:10 PM IST

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகின்றன. அதன்படி அரசியல் கட்சி விளம்பரங்கள் தேர்தல் அதிகாரிகளால் அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த 18- ந் தேதி நாகப்பட்டினம் மாவட்ட அலுவலக வளாகத்திற்கு எதிர்ப்புறம் உள்ள பஸ் நிலையம் எதிரே ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், விளம்பர பேனர்கள் மற்றும் சுவர் விளம்பரங்களை நகராட்சி ஊழியர்கள் அழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக 14-வது வார்டு நகர்மன்ற உறுப்பினரின் கணவர் முகமது அபுபக்கர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று, படங்கள் அகற்றப்பட்டது தொடர்பாக ஆணையர் மற்றும் ஊழியர்களை மிரட்டியும், தகாத வார்த்தையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. மேலும் கதவினை காலால் எட்டி உதைத்தும் அடாவடியில் ஈடுப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து நகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் சார்பில் நாகை வெளிப்பாளையம் காவல்  நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகை நகராட்சி அலுவலகத்துக்குள் நுழைந்து அங்குள்ள ஊழியர்களை கவுன்சிலரின் கணவர் முகமது  அபுபக்கர் மிரட்டுவது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.