Watch : பழனி மலைக்கோவில் கும்பாபிஷேக மண்டல பூஜை 1008 சங்காபிஷேகத்துடன் நிறைவு!

Mar 17, 2023, 12:12 PM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த ஜனவரி 27ம் தேதி நடைபெற்றது. அதன் தொடர்சியாக 48நாட்கள் மண்டலபூஜை நடைபெற்று வந்தது. மண்டலபூஜையின் 48வது நாள் நிறைவு நாளான இன்று மலை மீது உள்ள கார்த்திகை மண்டபத்தில் மண்டலபூஜை நிறைவு யாகம் நடைபெற்றது‌.

விநாயகர் பூஜை, புண்யாக வாசனம், பஞ்சகவ்யம், கலசபூஜை மற்றும் சங்குபூஜை ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து பூர்ணாகுதியுடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், உச்சிகால பூஜையின் போது யாக குண்டத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்ட 1008 வலம்புரி சங்குகளில் இருந்த புனித தீர்த்தங்களை பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜை செய்யப்பட்டது‌. இந்நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.