Mar 22, 2023, 5:01 PM IST
திண்டுக்கல் அடுத்த ரெட்டியார் சத்திரம் அருகே உள்ள இராமலிங்கம்பட்டியில் ஜலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் ஆன 15 அடி உயர காவல் தெய்வமான சங்கிலி கருப்பு சிலை உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு அமாவாசை அன்று சங்கிலி கருப்ப சாமிக்கு நள்ளிரவில் அபிஷேகமும், சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் படி நேற்று அமாவாசை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பால், தயிர், சந்தனம், மஞ்சள், குங்குமம் ஆகிய 5 நறுமணப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. எலுமிச்சை பழ மாலை, பூ மாலை மற்றும் 15 வகையான மதுபானங்கள் கொண்டு மாலை செய்து அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
தொடர்ந்து குவாட்டர் ஊற்றி சங்ஙிலி கருப்பனுக்கு அபிஷேகம் செய்தனர். அப்போது அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆடு பலியிட்டு, அசைவம் செய்து படையலிட்டு வழிபாடு நடத்தினர். அமாவாசை அன்று நள்ளிரவில் காவல் தெய்வத்திற்கு விருப்பமான உணவுகள் படைத்து வழிபட்டால் சாந்தமடைந்து ஊரை காப்பார் என்ற ஐதீகத்தில் வழிபாடு நடத்தப்படு வருகிறது. தங்களது தொழில் சிறக்கவும் நாடு செழிக்கவும் நள்ளிரவு சிறப்பு வழிபாட்டில் தொடர்ந்து பங்கேற்று வருவதாக பக்தர்கள் தெரிவித்தனர்