Jun 2, 2023, 11:29 AM IST
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அடுத்துள்ள அஞ்சுகுழிப்பட்டியில் உள்ள ஸ்ரீமுத்தாலம்மன், ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீபகவதியம்மன் கோயில் திருவிழா கடந்த 26ம் தேதி தொடங்கியது. திருவிழாவையொட்டி பொங்கல் வைத்தும், அக்னிச்சட்டி எடுத்தும், கிடா வெட்டியும் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான வழுக்கு மரம் ஏறுதல் வியாழக்கிழமை நடைபெற்றது.
50 அடி உயர வழுக்கு மரத்தின் உச்சியில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்குடன் ரூ.501 கட்டப்பட்டிருந்தது. மாலை 4.30 மணிக்கு வழுக்கு மரத்தில் ஏறுவதற்கு இளைஞர்கள் போட்டிப் போட்டு முயற்சித்தனர். சுமார் ஒன்றரை மணி நேர முயற்சிக்கு பின் சந்தனம்(40) என்பவர் வழுக்கு மர உச்சிக்கு சென்று தேங்காய், பழத்துடன் ரூ.501யை கைப்பற்றினார்.