Apr 9, 2024, 12:23 PM IST
நான் ஒன்றும் கமிஷன் வாங்கி முன்னேறியவள் இல்லை. உழைப்பில் முன்னேறியவள். மக்களுக்கான மாற்றத்தை தரவே இங்கு போட்டியிடுகிறேன் என திலகபாமா தெரிவித்தார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகத்தில் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் வரும் 17ம் தேதியுடன் நிறைவு பெறுவதால் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பாஜக கூட்டணி பாமக வேட்பாளர் திலகபாமா தினமும் வித்யாசமான முறைகளில் மக்களை கவரும் வண்ணத்தில் வாக்கு சேகரித்தும் பல்வேறு வாக்குறுதிகளையும் அளித்து வருகிறார். இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்டப் பகுதியில் உள்ள மார்க்கெட் பகுதியில் பேசிய திலகபாமா: இவ்வளவு பெரிய மார்க்கெட்டில் அனைவரும் வெயிலில் வாடுகின்றனர். இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு, உங்களிடம் வாக்குகளை வாங்கி வென்றவர்களுக்கு ஒருங்கிணைந்த மார்க்கெட் பகுதியை அமைத்துத் தர ஏன் தோன்றவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.
ஒருமுறை வாய்ப்புத் தாருங்கள். நீங்கள் எதிர்பாராத இடங்களில் இருந்து உதவிகளைப் பெற்றுத் தருவேன் என பேசினார். மேலும் தோல்வி பயத்தில் ஐ.பெரியசாமியிடம் நான் பணம் வாங்கி விட்டதாக திமுகவினர் பேசி வருகின்றனர். அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு பணம் வேண்டுமானால் நான் தருகிறேன் என ஆவேசமாக கூறினார். நான் ஒன்றும் கமிஷன் வாங்கி முன்னேறியவள் இல்லை. உழைப்பில் முன்னேறியவள் எனக் குறிப்பிட்ட திலகபாமா மக்களுக்கான மாற்றத்தை தரவே இங்கு போட்டியிடுகிறேன் எனத் தெரிவித்தார்.