இந்தியாவின் தங்கமங்கை பி.வி.சிந்துவின் சாதனைப் பயண வீடியோ..!

Aug 30, 2019, 1:32 PM IST

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஜூலை 5, 1995ம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் பி.வி.ரமணா - பி.விஜயா இருவருமே கைப்பந்து(வாலி பால்) வீரர்கள். சிந்துவின் தந்தை அர்ஜூனா விருது வென்றவர்.

அண்மையில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.  உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்கு சொந்தக்காரர். 

ஆசிய போட்டிகள், காமன்வெல்த், ஒலிம்பிக், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் என அனைத்து வகையான போட்டிகளிலும் பதக்கங்களை வாரி குவித்துள்ளார். 2016 ஒலிம்பிக்கில் இறுதி போட்டிவரை சென்ற பி.வி.சிந்து, தங்கம் வெல்வார் என நாடே எதிர்பார்த்து காத்திருந்தது. 

ஆனால் உலகின் முன்னணி வீராங்கனையான ஸ்பெயினை சேர்ந்த கரோலின் மெரினிடம் 3 செட்களிலும் இறுதி வரை போராடி தோற்றார். இறுதி போட்டியில் தோற்றதால், தங்கத்தை தவறவிட்டு வெள்ளி பதக்கத்தை வென்றார். ஒலிம்பிக்கில் பேட்மிண்டனில் வெள்ளி பதக்கம் வென்ற முதல் வீராங்கனை சிந்துதான்.

2014ல் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கல பதக்கமும் கடந்த ஆண்டு நடந்த ஆசிய போட்டிகளில் வெள்ளி பதக்கமும் வென்றார். 2014 காமன்வெல்த் போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்ற சிந்து, 2018 காமன்வெல்த்தில் வெள்ளி வென்றார். 2013,2014 உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கல பதக்கமும், 2017,2018 உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி பதக்கமும் வென்றார். 

2 முறை உலக சாம்பியன்ஷிப்பில் தங்க பதக்கத்தை தவறவிட்ட சிந்து, இந்த முறை 21-7, 21-7 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று தங்கத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.