Actor Bala Free Auto Service : சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகரான பாலா தொடர்ந்து பல நல்ல சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகின்றார். அந்த வகையில் அவர் இப்பொது ஒரு புதிய முன்னெடுப்பை துவங்கியுள்ளார்.
சின்னத்திரையில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோர்களின் மூலம் புகழ்பெற்ற நடிகர் தான் பாலா, தற்போது வெள்ளித் துறையிலும் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நல்ல முறையில் நடிக்க துவங்கியுள்ளார். சட்டென கவுண்டர் அடிக்கும் அவருடைய துடிப்பான பேச்சும், அவரின் உடல் மொழியும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலம். ஆனால் அதைவிட இப்பொழுது பிரபலமாக உள்ள ஒரு விஷயம் தான் அவர் பொது மக்களுக்கு செய்து வரும் உதவிகள்.
ஏற்கனவே நடிகர் பாலா அவர்கள் பல மலை கிராம மக்களுக்கு உதவும் வகையில், அவர்களுக்கு இலவச ஆம்புலன்ஸ்களை வாங்கி பரிசளித்து வருவது பலர் மத்தியில் பெரும் பாராட்டுகளை பெற்றுள்ளது. அதேபோல சென்னை மக்கள் மிக்ஜாம் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒவ்வொருவருடைய வீடு தேடி சென்று ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்ததோடு, பலருக்கும் பல்வேறு உதவிகளை செய்தார் நடிகர் திரு. பாலா. இதனால் அரசியல் தலைவர்கள் பலரும் பாலாவின் இந்த செயலுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
சில வாரங்களுக்கு முன்பு கூட செங்கல்பட்டு அருகே உள்ள கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க சுமார் 3 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளார் அவர். இது குறித்து பாலாவிடம் மனு கொடுத்த வெறும் பத்து நாட்களில் அந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அவர் அமைத்து கொடுத்ததற்காக கிராம மக்கள் அவருக்கு தங்களுடைய நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.
இப்படி தொடர்ச்சியாக பல நல்ல விஷயங்களை பாலா செய்து வரும் நிலையில் நடிகர் பாலா இலவச ஆட்டோ சேவை ஒன்றை துவக்கி வைத்துள்ளார். இது குறித்து வெளியாகி உள்ள தகவலின்படி முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மருத்துவ அவசரத்தில் உள்ளவர்களுக்கு இலவசமாக ஆட்டோ சேவை வழங்கப்படும் என்று பாலா அறிவித்துள்ளார்.
சென்னை அனகாபுத்தூர், பம்மல் மற்றும் பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் இந்த இலவச ஆட்டோ சேவை இயக்கப்பட உள்ளது. ஆகவே உதவி தேவைப்படும் மக்கள் 9176878751 என்ற எண்ணிற்கு அழைத்து இந்த உதவிகளை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.